ஆஸ்திரேலிய அணியைத் தொடர்ந்து, நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரிலும் இந்திய அணியில் சேர்க்கப்படாத ரவீந்திர ஜடேஜா, இன்று நடைபெற்ற ரஞ்சிப் போட்டியில் இரட்டை சதம் விளாசியுள்ளார்.
சமீபத்தில் இலங்கை அணிக்கு எதிராக இலங்கையில் நடந்த டெஸ்ட் தொடரில் ரவீந்திர ஜடேஜாவும், அஷ்வினும் இடம் பிடித்தனர். அதில் அவர்கள் சிறப்பாகவும் விளையாடினர். குறிப்பாக,பேட்டிங் மற்றும் பவுலிங் ஆகிய இரண்டிலும் ஜடேஜா சிறப்பாக செயல்பட்டு, அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.
Photo by Ron Gaunt / BCCI / SPORTZPICS
ஆனால், அதற்கு பின் நடந்த இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் ஜடேஜாவுக்கும், அஷ்வினுக்கும் அணியில் வாய்ப்பளிக்கப்படவில்லை.
தொடர்ந்து, நடந்து முடிந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரிலும் மீண்டும் இவர்கள் புறக்கணிக்கப்பட்டார்கள்.
அடுத்து நடைபெறவுள்ள இங்கிலாந்து தொடரிலும் இவர்கள் சேர்க்கப்படவில்லை. பெங்களூருவில் நடைபெற்ற யோ-யோ ஃபிட்னஸ் ஸ்ட்டில் இருவரும் நல்ல புள்ளிகள் பெற்றுள்ளனர். இதனால், இங்கிலாந்து தொடரில் நிச்சயம் மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் என இருவரும் எதிர்பார்த்திருந்த நிலையில்,
நேற்று(அக்.14) தேர்வுக் குழு வெளியிட்ட வீரர்கள் பட்டியலில் இவர்களது பெயர் இடம்பெறவில்லை.
இந்தநிலையில், சவுராஷ்டிரா அணிக்கும், ஜம்மு காஷ்மீர் அணிக்கும் இடையே நடைபெற்று வரும் ரஞ்சிப் போட்டியின் இரண்டாம் நாளான இன்று, சவுராஷ்டிரா வீரர் ரவீந்திர ஜடேஜா இரட்டை சதம் அடித்துள்ளார். 313 பந்துகளை சந்தித்த ஜடேஜா, 201 ரன்கள் குவித்தார். இதில் 23 பவுண்டரிகளும், இரண்டு சிக்ஸர்களும் அடங்கும். இறுதியில், வசீம் ராஸா பந்துவீச்சில் அவர் அவுட்டானார். இதனால், சவுராஷ்டிரா அணி தனது முதல் இன்னிங்ஸில் 624 ரன்கள் குவித்தது.
அடுத்த நடைபெறவுள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி உருவாக்கமாக இருந்தாலும், ஹர்திக் பாண்ட்யா வருகைக்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அணியில் இருந்து ஜடேஜாவும், அஷ்வினும் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். இருப்பினும், டெஸ்ட் போட்டிகளில் இவர்களது பங்களிப்பு இன்றி இந்திய அணி உடனடியாக வெற்றிகளை குவிப்பது கடினமே. இதனால், டெஸ்ட் தொடர்களில் இவர்களுக்கு தேர்வுக்குழு வாய்ப்பளிக்கும் என எதிர்பார்க்கலாம்.
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடருக்கு பிறகு இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதும் ஒருநாள் மற்றும் டி20 தொடர் தொடங்குகிறது. இதில், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்குபெறும் இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதும் ஒருநாள் தொடர் வரும் அக்டோபர் மாதம் 22-ஆம் தேதி தொடங்குகிறது. இதற்கான இந்திய அணி வீரர்கள் அடங்கிய பட்டியலை தேர்வுக்குழு இன்று வெளியிட்டுள்ளது.
விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில், ரோஹித் ஷர்மா, ஷிகர் தவான், அஜின்க்யா ரஹானே, மனீஷ் பாண்டே, கேதர் ஜாதவ், தினேஷ் கார்த்திக், மகேந்திர சிங் தோனி, ஹர்திக் பாண்ட்யா, அக்ஷர் படேல், குல்தீப் யாதவ், யுவேந்திர சாஹல், ஜஸ்ப்ரித் பும்ரா, புவனேஷ் குமார் மற்றும் ஷர்துல் தாக்குர் ஆகிய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
தமிழகத்தின் ரவிச்சந்திரன் அஷ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் மீண்டும் அணியில் சேர்க்கப்படவில்லை. அதேபோல், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் அணியில் இடம் பெற்றிருந்த உமேஷ் யாதவ், முகமது ஷமி, லோகேஷ் ராகுல் ஆகியோரும் நீக்கப்பட்டுள்ளனர்.
மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில்
இரு அணிகளும் மோதவுள்ளது. வரும் அக்.,22-ஆம் தேதி மும்பையில் தொடங்கும் முதல் ஒருநாள் போட்டியைத் தொடர்ந்து, இரண்டாவது போட்டி 25-ஆம் தேதியும், மூன்றாவது போட்டி 29-ஆம் தேதியும் நடக்கிறது.
இதைத் தொடர்ந்து, முதல் டி20 போட்டி நவம்பர் 1-ஆம் தேதியும், நவம்பர் 4, 7-ல் அடுத்த இரண்டு டி20 போட்டிகளும் நடைபெற உள்ளது. மும்பை, புனே, டெல்லி, ராஜ்கோட், திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் அனைத்து போட்டிகளும் நடைபெறுகிறது.