வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான முதல் டெஸ்டில் அறிமுகமான யஷஷ்வி ஜெய்ஸ்வால், அறிமுக போட்டியில் சதம் அடித்து புதிய வரலாறு படைத்திருக்கிறார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் படுதோல்வியை சந்தித்து பல்வேறு விமர்சனங்களை சந்தித்து வந்த இந்திய அணி, மூன்றாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிளின் முதல் சீரிஸ் விளையாடுவதற்கு வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
முதல் டெஸ்ட் போட்டி டாமினிக்கா தீவுகளில் உள்ள மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்து மிகவும் தடுமாற்றத்துடன் விளையாடி 150 ரன்கள் மட்டுமே அடித்து ஆல் அவுட் ஆனது. சுழல் பந்துவீச்சு ஜோடியான ரவிச்சந்திரன் அஸ்வின் ஐந்து விக்கெடுகள், ஜடேஜா மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினர்.
அடுத்துக் களமிறங்கிய இந்திய அணியின் துவக்க ஜோடி ரோகித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் இருவரும் சிறப்பாக விளையாடி வந்தனர். முதல் நாள் முடிவில் இந்தியா 80 ரன்கள் அடித்து விக்கெட் இழப்பின்றி இருந்தது.
2ஆம் நாள் ஆட்டத்தில் விரைவாக அரைசதம் அடித்தார் அறிமுக வீரர் ஜெய்ஸ்வால். மற்றொரு பக்கம் சிறப்பாக ஆடிவந்த ரோகித் சர்மா அரைசதம் கடந்தார். மெல்லமெல்ல இந்த ஜோடியின் பார்ட்னர்ஷிப் 150 ரன்களை கடந்தது.
உணவு இடைவேளை முடிந்து வந்து விரைவாக ரன்குவிப்பில் ஈடுபட்ட ரோகித்-ஜெய்ஸ்வால் ஜோடி 200 ரன்களை கடந்தது. ஒருமுனையில் நின்று அசராமல் ஆடிவந்த ஜெய்ஸ்வால் அறிமுக போட்டியில் அரைசதம் அடித்ததை சதமாக மாற்றினார்.
இதன் மூலம் அறிமுக போட்டியில் சதமடித்த 3ஆவது இந்திய வீரர் எனும் வரலாறை படைத்து அசத்தியுள்ளார். இந்த பட்டியலில் ஷிகர் தவான், ப்ரிதிவி ஷா இருக்கின்றனர்.
இந்திய அணிக்காக அறிமுக போட்டியில் சதமடித்த துவக்க வீரர்கள் பட்டியல்:
1. ஷிகர் தவான் – 187 ரன்கள் vs ஆஸ்திரேலியா, 2013
2. ப்ரிதிவி ஷா – 134 ரன்கள் vs வெஸ்ட் இண்டீஸ், 2018
3. யஷஷ்வி ஜெய்ஸ்வால் – 100* ரன்கள் vs வெஸ்ட் இண்டீஸ், 2023