எனக்காக அவர் தன்னுடைய விக்கெட்டை தியாகம் செய்தார். அதனால் தான் என்னால் சாதனை படைக்க முடிந்தது என்று பத்திரிகையாளர்கள் சந்திப்பில் யஷஷ்வி ஜெய்ஸ்வால் பேட்டி அளித்துள்ளார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிய போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது.
நிதிஷ் ராணா 22 ரன்கள், வெங்கடேஷ் ஐயர் 52 ரன்கள் அடிக்க, 20 ஓவர்களில் கொல்கத்தா அணி 149 ரன்கள் அடித்தது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஓபனிங் இறங்கிய ஜெய்ஸ்வால் முதல் ஓவரில் 26 ரன்கள் விளாசினார். 3 ஓவர்கள் முடிவதற்குள் 13 பந்துகளில் அரைசதமும் அடித்தார்.
ஜெய்ஸ்வால்-பட்லர் இருவருக்கும் நடுவே ரன் ஓடுவதில் குழப்பம் ஏற்பட்டதால் ஜெயஸ்வால் ஆட்டமிழக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்த நேரத்தில் பட்லர் தனது விக்கெட் தியாகம் செய்து வெளியேறினார்.
அடுத்ததாக உள்ளே வந்த சஞ்சு சாம்சன்-ஜெய்ஸ்வால் உடன் சேர்ந்து அதிரடியாக விளையாடி ரன்குவிக்க 13.1 ஓவர்களில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இலக்கை எட்டியது. 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
13 பந்துகளில் அரைசதம் அடித்திருந்த ஜெய்ஸ்வால், இறுதிவரை ஆட்டமிழக்காமல் உள்ளே நின்று 47 பந்துகளில் 98 ரன்கள் விளாசினார். சஞ்சு சாம்சன் 29 பந்துகளில் 48 ரன்கள் அடித்திருந்தார்.
ஆட்டநாயகன் விருது பெற்ற யஷஷ்வி ஜெய்ஸ்வால், போட்டி முடிந்தபின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் ஈடுபட்டார். அப்போது தனக்காக பட்லர் தியாகம் செய்தது பற்றி பேசினார். ஜெய்ஸ்வால் பேசியதாவது:
“நான் ஜோஸ் பட்லரிடம் இருந்துதான் நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன். இன்று நான் ஆட்டம் இழந்துவிடக்கூடாது என்பதற்காக அவர் தனது விக்கெட்டை தியாகம் செய்தார். அந்தத் தருணத்தில் தான் நான் இன்னும் பொறுப்புடன் விளையாட வேண்டும், நின்று ஆட்டத்தை முடித்துக் கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். பட்லர் மீது எனக்கு நிறைய மரியாதை இருக்கிறது. அவர் என்னை மதித்து இப்படி செய்ததற்கு நன்றி தெரிவித்துக் கொண்டு, எனது மன்னிப்பையும் அவரிடம் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்.” என்றார்.