இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை பொருத்தமற்றதாக, கேலிக்குரிய வகையில் அமைத்திருக்கிறார்கள் என்று இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆன்டர்ஸன் கடுமையாகச் சாடியுள்ளார்
இங்கிலாந்து செல்லும் இந்திய அணி ஆகஸ்ட் மாதத்தில் இருந்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டித் தொடரில் விளையாட உள்ளது. இதற்காக இம்மாத இறுதியில் இங்கிலாந்து செல்கிறது இந்திய அணி.
இந்நிலையில், தோள்பட்டை காயம் காரணமாக இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆன்டர்ஸனுக்கு 6 வார காலம் ஓய்வு அளித்துள்ளது இங்கிலாந்து அணி நிர்வாகம். இந்தியாவுடனான டெஸ்ட் தொடருக்கு முன்பாக ஆன்டர்ஸன் உடற்தகுதி அடைந்துவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தோள்பட்டை காயம் காரணமாக, நேற்று நடந்த ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் கூட ஆன்டர்ஸன் களமிறங்கவில்லை. இதனால் வலுவிழந்த இங்கிலாந்து அணி 6 ரன்கள் வித்திசாயத்தில் ஸ்காட்லாந்து அணியிடம் அதிர்ச்சித் தோல்வி அடைந்தது.
இந்தத் தோல்வி குறித்து ஜேம்ஸ் ஆன்டர்ஸன் பிபிசிக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:
”எனக்கு தோள்பட்டையில் கடந்த 2 ஆண்டுகளாக வலி ஏற்பட்டு வருகிறது. அவ்வப்போது சிகிச்சை எடுத்து நான் விளையாடி வந்தேன். ஆனால், இந்த முறை அப்படி இருக்க முடியாது என்பதால், நீண்ட இடைவெளியில் சிகிச்சைக்காக தயாராகி இருக்கிறேன். எனக்கு போதுமான ஓய்வும், உடற்பயிற்சியும் இருந்தால், நான் நன்றாகத் தேறிவிடுவேன்.
இந்தியாவுடனான இங்கிலாந்து அணி மோதும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் முட்டாள்தனமாக பட்டியலிடப்பட்டுள்ளது. 6 வாரங்களில் 5 டெஸ்ட் போட்டிகள் நடத்துமாறு பட்டியல் அமைக்கப்பட்டுள்ளது கேலிக்குரியதாகவும், பொருத்தமற்றதாகவும் இருக்கிறது.
இதுபோன்ற பட்டியல், வீரர்களுக்குக் கூடுதல் அழுத்தம் கொடுப்பதாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் இருக்கும். இதுபோன்ற குழப்பமான பட்டியலால், நான் லான்காஷையர் அணிக்காகக் கூட விளையாட முடியாமல் போகலாம். இதுபோன்று பட்டியல் அமைத்தவர்களை நினைத்து நான் வெட்கப்படுகிறேன்.
6 வாரங்களில் 5 டெஸ்ட் போட்டிகள் விளையாட வேண்டும் என்பது இங்கிலாந்து பந்துவீச்சாளர்களுக்கு மிகவும் சவாலானதாக இருக்கும், நெருக்கடியாகவும் இருக்கும்”.
இவ்வாறு ஆன்டர்ஸன் தெரிவித்தார்.
இதற்கிடையே தோள்பட்டை காயம் காரணமாகவும், இந்திய அணிக்கு எதிராக நன்றாகத் தயாராகும் விதமாக ஆன்டர்ஸனுக்கு 6 வாரங்கள் ஓய்வு அளித்துள்ளது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்.
இது குறித்து இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் டிரிவோர் பேலிஸ் கூறுகையில், ’’ஆகஸ்ட் 1-ம் தேதியில் இருந்து 6 வாரங்களில் 5 டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவுடன் நாங்கள் விளையாட வேண்டும் என்பது உண்மையில் சவாலானதாகும். பந்துவீச்சாளர்களுக்கு மிகவும் நெருக்கடியாகவும் இருக்கும்.
தோள்பட்டையில் ஏற்பட்ட காயத்தில் இருந்து முழுமையாக மீண்டு வர வேண்டும் என்பதற்காக ஆன்டர்ஸனுக்கு 6 வாரங்கள் ஓய்வு அளித்துள்ளோம். இந்தியாவுடன் டெஸ்ட் தொடருக்கு முன்பாக அவர் அணிக்குத் திரும்புவார். இந்தக் காயத்தால், வோர்செஸ்டர்ஷையர், ஹேம்ஷையர் அணிக்கு எதிரான போட்டியில் கூட ஆன்டர்ஸனால் விளையாட முடியாது’’ எனத் தெரிவித்தார்.