பத்திரிகையாளர்களை சந்திக்கும் அணியின் மூத்த நட்சத்திரம் ஓய்வு முடிவை அறிவிக்கப் போகிறாரா? அதிர்ச்சியில் ரசிகர்கள்!

பத்திரிகையாளர்களை சந்திக்கும் அணியின் மூத்த நட்சத்திரம் ஓய்வு முடிவை அறிவிக்கப் போகிறாரா? அதிர்ச்சியில் ரசிகர்கள்!

இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன் திடீரென பத்திரிகையாளர்களை திங்கட்கிழமை அன்று சந்திக்க இருக்கிறார். இது அவரது ஓய்வு முடிவை அறிவிக்க இருக்குமோ? என ரசிகர்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.

2003ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு அறிமுகமான ஜேம்ஸ் ஆண்டர்சன், தொடர்ந்து 17 ஆண்டுகளாக இங்கிலாந்து அணிக்கு முன்னணி பந்துவீச்சாளராக திகழ்ந்து வருகிறார். 100க்கும் மேற்பட்ட டெஸ்ட் போட்டிகளில் ஆடிய ஆண்டர்சன் இதுவரை 590 விக்கெட்டுகளை கைப்பற்றி, இங்கிலாந்து அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றியவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார்.

இவரது கிரிக்கெட் வாழ்க்கை முடிவை நோக்கி சென்று கொண்டிருப்பதாக பல விமர்சனங்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. அதற்கு ஏற்றார்போல ஆண்டர்சனின் நடவடிக்கையும் இருந்து வருகிறது. ஊரடங்கிற்க்கு பிறகு நடைபெற்ற 3 டெஸ்ட் போட்டிகளில் ஆடிய ஆண்டர்சன் 6 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார்.

பாகிஸ்தான் அணிக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டியில் ஒரு விக்கெட்டை கைப்பற்றிய இவர், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆடுவாரா? மாட்டாரா? என தெரியவில்லை. இந்நிலையில் ஆண்டர்சன் திடீரென பத்திரிக்கையாளர்களை சந்திக்க அழைப்பு விடுத்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த அழைப்பிற்காக காரணம் என்னவாக இருக்கும்? அல்லது ஓய்வு முடிவை அறிவிக்கப் போகிறாரா? என்ற யூகங்கள் தொடர்ந்து பத்திரிகைகளில் எழுதப்பட்டு வருகின்றன. என்னவாக இருந்தாலும் திங்கட்கிழமை மாலை ஜேம்ஸ் ஆண்டர்சன் பத்திரிக்கையாளர் சந்திப்பை முடித்த பிறகு தெளிவாகிவிடும்.

இதற்கிடையில் ஜேம்ஸ் ஆண்டர்சன் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆடுவது குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் ஒரு கருத்தினை முன்வைத்துள்ளார்.

அவர் கூறுகையில், “முதல் டெஸ்ட் போட்டியில் ஜேம்ஸ் ஆண்டர்சன் சரிவர பந்து வீசவில்லை. ஆனால் இளம் வீரர் கிறிஸ் வோக்ஸ் மிகவும் சிறப்பாக பந்து வீசினார். ஸ்டோக்ஸ் தொடர்ந்து நன்றாக பந்து வீசி வருகிறார். இரண்டாவது மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டிகளில் ஸ்டோக்ஸ் ஆடவில்லை. ஆதலால் ஆண்டர்சன் தொடர்ந்து இடம் பெறுவார் என நினைக்கிறேன். ஸ்டோக்ஸ் மீண்டும் அணிக்கு திரும்பிவிட்டால் கிறிஸ் வோக்ஸ் மற்றும் ஆண்டர்சன் இருவரில் வோக்ஸ் அணியில் ஆடவைக்க வேண்டும் என நான் கூறுவேன்.

இத்தனை ஆண்டுகளில் ஆண்டர்சன் அணியில் இல்லாமல் இருந்தால் சரியாக இருக்கும் என நான் இதுவரை கூறியதில்லை. ஆனால் இம்முறை நிலைமை அவ்வாறு கூறுவதுப்போல இருக்கிறது. ஏனெனில் முதல் போட்டியில் கிறிஸ் வோக்ஸ் மிக அருமையாக பேட்டிங் மற்றும் பந்து வீச்சு இரண்டிலும் பாகிஸ்தான் அணியை அடக்கினார்.” என்றார்.

Prabhu Soundar:

This website uses cookies.