’நான், தன் பாலின ஈர்ப்பாளன் இல்லை’ என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஜேம்ஸ் பாக்னர் விளக்கம் அளித்துள்ளார்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ஜேம்ஸ் பாக்னர். இவர், தனது 29 வது பிறந்த நாளை சனிக்கிழமை கொண்டாடினார். தன் தாயுடனும், ஆண் நண்பருடன் கொண்டாடிய பாக்னர், அது தொடர்பான புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதில் ’’பாய்பிரண்ட்’ என்று குறிப்பிட்ட விஷயம் ஆஸ்திரேலிய மீடியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதாவது அவர் தன்பாலின ஈர்ப்பாளர் என்றும் அவர் நண்பரும் அவரும் ஒன்றாக வாழ்ந்துவருவதாகவும் செய்திகள் வெளியாயின.
இந்நிலையில் தான் ’கே’ இல்லை என்றும் அந்த பதிவு தவறாகப் புரிந்து கொள்ளப் பட்டிருப்பதாகவும் பாக்னர் இன்று விளக்கம் அளித்துள்ளார். பாய்பிரண்ட் என்பதை பெஸ்ட் பிரண்ட் என்று மாற்றியுள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, ‘’எனது பதிவு தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு விட்டது. நான் தன்பாலின ஈர்ப்பாளன் இல்லை. ஆனால், எனது பதிவைப் பார்த்துவிட்டு, தன் பாலின ஈர்ப்பாளர்களின் பெரிய ஆதரவு கிடைத்தது. அந்த புகைப்படத்தில் இருப்பது எனது சிறந்த நண்பர்’’ என்று தெரிவித்துள்ளார்.
மேலும், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியமும் ஜேம்ஸ் பாக்னர் ஒரு ஒரினச் சேர்க்கையாளர் என்று நினைத்து வாழ்த்துக்கூறி ட்விட் செய்தது. தன்னுடைய இன்ஸ்ட்ராகிராம் பதிவு அனைவராலும் தவறாக எடுத்துக்கொள்ளப்பட்டு தன்னைபற்றி பலரும் தவறாக நினைக்கத் தொடங்கிவிட்டார்கள் என்று அறிந்த ஜேம்ஸ் பாக்னர் பதற்றமடைந்தார். தான் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் இல்லை என்பதை மறுத்து, அதன்பின் இன்று காலை விளக்கம் அளித்தார்.
ஜேம்ஸ் பாக்னர் இன்ட்ராகிராம் பதிவில் அளித்த விளக்கத்தில், ” நான் வெளியிட்ட புகைப்படம் என்னுடைய சிறந்த நண்பர் ராப்ஜாப்ஸ்டாவினுடையது. என்னுடைய வீட்டில் ஒரு பகுதியில் இவர் கடந்த 5 ஆண்டுகளாக வசித்து வருகிறார். ஆனால், நான் நேற்று இரவு பதிவிட்ட கருத்தான 5ஆண்டுகளாக ஒன்றாக வாழ்கிறோம் என்ற வார்த்தையை தவறாகப் புரிந்து கொண்டுவிட்டனர். நான் ஓரினச்சேர்க்கையாலர் அல்ல. அதேசமயம், எல்ஜிபிடி பிரிவினருக்கு மக்களிடம் ஆதரவு இருப்பதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன்.
அன்பு அன்புதான் என்பதை ஒருபோதும் மறக்கமுடியாது. எப்படியாகினும், ராப்ஜாப்ஸ்டா என்னுடைய உயிர்தோழர்.கருத்து பதிவிட்ட ஒவ்வொருவருக்கும் நன்றி ” எனத் தெரிவித்தார்.
ஜேம்ஸ் பாக்னரின் விளக்கத்தைப் பார்த்தபின், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியமும் மன்னிப்பு கோரி அறிக்கை வெளியிட்டது. அதில், ” ஜேம்ஸ் பாக்னர் சிறந்த வீரர். அவர் ஒருபோதும் தன்னுடைய சமூக வலைதளத்தில் விளையாட்டாக எதையும் பதிவிடமாட்டார் என்று நம்பியே அந்த புகைப்படத்தைப் பார்த்தோம். அவரின் கருத்து இருவருக்கும் இடையிலான உறவைக் குறிப்பதாக இருந்தது. நாங்களும் தவறாகவே புரிந்துகொண்டோம். அனைவரின் கருத்து பாக்னரை பாதித்துள்ளது என்பதை உணர்கிறோம். தவறாக நினைத்தமைக்கு ஆஸ்திரேலிய வாரியமும் வருத்தம் தெரிவிக்கிறது ” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.