இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஜேம்ஸ் டெய்லர், இங்கிலாந்து வீரர்கள் தேர்வுக்குழுவில் முழுநேர உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
இங்கிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான ஜேம்ஸ் டெய்லர், இங்கிலாந்து அணிக்காக 7 டெஸ்ட் போட்டிகளும் 27 ஒருநாள் போட்டிகளும் ஆடியுள்ளார்.
மேலும் கவுண்ட்டி போட்டிகளில், அவர் 2008 முதல் 2011 வரை லீஸ்டெஸ்டெர்ஷயர் அணியிலும் மற்றும் 2012-16 ஆம் ஆண்டு வரை நாட்டிங்ஹாம்ஷையரில் ஆடி 20 சதங்களை அடித்தார்.
சில காயம் காரணமாக நிறைய போட்டிகள் ஆடும் முன்பே இங்கிலாந்து சர்வதேச அணியில் இருந்து ஓய்வு பெற்றார். அதன் பிறகு, கமெண்ட்ரி, பயிற்சியாளர் பொறுப்பு மற்றும் வீரர்களுக்கு ஆலோசகர் என சில பொறுப்புகளையும் வகித்து வந்தார்.
இவர் நியமிக்கப்பட்ட பிறகு தற்போது தேர்வுக்குழுவில் மூன்று உறுப்பினர்கள் உள்ளனர். டெய்லருடன், எட் ஸ்மித் மற்றும் பயிற்சியாளர் ட்ரேவர் பெய்லிஸ் ஆகியோரும் உள்ளனர்.
தேர்வுக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்ட பிறகு ஜேம்ஸ், “எனக்கு மிகவும் பயமாகவும் அதேநேரம் மகிழ்ச்சியாகவும் உள்ளது. இந்த பொறுப்பை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் எனக்கு அளித்ததற்கு பெருமிதம் அடைகிறேன். மீண்டும் இங்கிலாந்து வாரியத்திற்கு பணியாற்ற வாய்ப்பு கிடைத்ததற்கு நன்றி” என கூறினார்.
மேலும், “இந்த போட்டிக்காக நான் உழைப்பது எனக்கு ஆர்வமாகவும் உள்ளது, எனது முழு திறமையையும், ஆற்றலையும் இங்கிலாந்து அணிக்காக அளிக்க காத்திருக்கிறேன்” என தெரிவித்தார்.