இங்கிலாந்து வீரர் ஜோஸன் ராய் சதம் அடித்த மகிழ்ச்சியில் நடுவர் மீது மோதியது மைதானத்தில் இருந்த ரசிகர்களுக்கு சிரிப்பை ஏற்படுத்தியது.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து – பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 386 ரன்கள் குவித்தது. அந்த அணியில் ராய் 153 ரன்கள் விளாசினார். பட்லர் 64, பேரிஸ்டோவ் 51 ரன்கள் எடுத்தனர்.
இந்தப் போட்டியில், 92 பந்துகளில் ராய் சதம் அடித்து இருந்தார். 27வது ஓவரில் 96 ரன்கள் எடுத்திருந்த போது, முஸ்டபிஸுர் ரஹ்மான் வீசிய பந்தை ராய் அடித்து விட்டு ஓடினார். பீல்டரையே பார்த்துக் கொண்டு ஓடினார். பீல்டர் பந்தை தவறவிட்டதால் அது பவுண்டரி ஆனது. உற்சாகத்தில் துள்ளி குதிக்க முயன்றார் ராய்.
ஆனால், எதிரே நடுவர் இருப்பதை பார்க்கவில்லை. நடுவரும் அவர் வருவதை பார்த்து ஒதுங்கினார். அப்பொழுதும் ராய், நடுவர் மீது மோதிவிட்டார். நடுவரும் ராய் மோதிய வேகத்தில் கீழே சரிந்து விழுந்தார். உடனே ராய் அவரை தூக்கிவிட்டார்.
முதலில் இங்கிலாந்து ரசிகர்கள் வீரர்கள் அனைவரும் ராய் சதம் அடித்த மகிழ்ச்சியில் கைதட்டினர். ஆனால், நடுவர் கீழே விழுந்ததை பார்த்து சிரித்துவிட்டனர். மைதானம் முழுவதும் சிரிப்பொலி சத்தம் கேட்டது. ரசிகர்களும் சிரிப்பை அடக்க முடியாமல் நீண்ட நேரம் சிரித்தனர்.
ராய் நடுவர் மீது மோதும், புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
அதைத் தொடர்ந்து ஜோஸ் பட்லர்-கேப்டன் மொர்கன் இணை ஸ்கோரை உயர்த்தும் பணியை மேற்கொண்டது. சிறப்பாக ஆடிய ஜோஸ்பட்லர் தனது 19-ஆவது ஒருநாள் அரைசதத்தை பதிவு செய்தார். 43-ஆவது ஓவரில் ஸ்கோர் 300-ஐ கடந்தது.
4 சிக்ஸர், 2 பவுண்டரியுடன் 44 பந்துகளில் 64 ரன்களை விளாசிய ஜோஸ் பட்லர், சைபுதீன் பந்தில் செளமிய சர்க்காரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். கேப்டன் மொர்கனும் 35 ரன்களுடன் மெஹிதி ஹாசன் பந்தில் அவுட்டானார். பின்னர் கிறிஸ் வோக்ஸ் 18 (2 சிக்ஸர்) , லியம் பிளங்கட் 27 (1 சிக்ஸர், 4 பவுண்டரி) ஆகியோர் கடைசி கட்டத்தில் சிறப்பாக ஆடி ஸ்கோரை உயர்த்தி அவுட்டாகாமல் இருந்தனர். 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 386 ரன்களை குவித்தது இங்கிலாந்து. வங்கதேசத் தரப்பில் முகமது சைபுதீன் 2-78, மெஹிதி ஹாசன் 2-67 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
387 ரன்கள் வெற்றி இலக்கு
387 ரன்கள் வெற்றி இலக்குடன் வங்கதேசத் தரப்பில் தமிம் இக்பால், செளமிய சர்க்கார் களமிறங்கினர். எனினும் ஆர்ச்சர் பந்தில் 2 ரன்களுக்கு போல்டானார் சர்க்கார். 19 ரன்கள் எடுத்திருந்த தமிம், மார்க் உட் பந்தில் வெளியேறினார்.அதன் பின் ஷகிப் அல் ஹசன்-முஷ்பிகுர் ரஹிம் இணை நிலைத்து ஆடி ரன்களை சேர்த்தது. 44 ரன்களை எடுத்த முஷ்பிகுர், பிளங்கட் பந்தில் அவுட்டானார். இருவரும் இணைந்து 3-ஆவது விக்கெட்டுக்கு 100 ரன்களை சேர்த்தனர். இதன் பின் ஆதில் ரஷித் பந்துவீச்சில் டக் அவுட்டானார் முகமது மிதுன். அப்போது 4 விக்கெட் இழப்புக்கு 170 ரன்களை எடுத்திருந்தது வங்கதேசம்.
ஷகிப் 8-ஆவது சதம்
ஒருமுனையில் அபாரமாக ஆடிய ஷகிப் அல் ஹசன் தனது 8-ஆவது ஒருநாள் சதத்தை பதிவு செய்தார். 35-ஆவது ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 186 ரன்களை எடுத்திருந்தது வங்கதேசம். 1 சிக்ஸர், 12 பவுண்டரியுடன் 121 ரன்களுடன் ஷகிப் அல் ஹசனும், மஹ்முத்துல்லா 28, மோஸாடேக் ஹுசேன் 26, சைபுதீன் 5, மெஹிதி ஹாசன் 12, முஸ்தபிஸþர் ரஹ்மான் 0 ரன்களுடன் அவுட்டாகினர். மோர்டாஸா 4 ரன்களுடன் களத்தில் இருந்தார். இறுதியில் 48.5 ஓவர்களில் 280 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
ஜோப்ரா ஆர்ச்சர் 3-29, பென் ஸ்டோக்ஸ் 3-23, மார்க் உட் 2-52 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.