“சத்தியமா நம்புங்க… இந்த டைம் பும்ரா வந்துவிடுவார்” – இந்திய அணிக்கு எப்போது வருவார்? பிசிசிஐ அதிகாரி சொன்ன தகவல்!

ஜஸ்பிரீத் பும்ரா காயம் எப்படி இருக்கிறது? இந்திய அணிக்கு எப்போது எடுக்கப்படுவார்? போன்ற கேள்விகளுக்கு இந்திய தேசிய அகடமியில் உள்ள அதிகாரி பதில் கொடுத்திருக்கிறார்.

கிட்டத்தட்ட பத்து மாத காலம் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடாமல் முதுகு பகுதியில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை பெற்று வரும் ஜஸ்பிரித் பும்ரா, மீண்டும் இந்திய அணிக்கு எப்போது திரும்புவார்? என்கிற கேள்விகள் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகின்றனர்.

கடந்த டிசம்பர் மாதமே மீண்டும் இந்திய அணிக்கு திரும்பப்போகிறார். காயத்திலிருந்து குணமடைந்துவிட்டார் என பிசிசிஐ தரப்பில் இருந்து தகவல்கள் கூறப்பட்டது. பின்னர் பும்ரா இன்னும் சிகிச்சை பெற வேண்டியுள்ளது என்று அதே பிசிசிஐ தரப்பு தெரிவித்துவிட்டது.

நியூசிலாந்து, இலங்கை ஆகிய அணிகளுக்கு எதிரான ஒருநாள் தொடர், ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் என அனைத்திற்கும் முன்பும் பும்ரா வந்துவிடுவார் என்று பேச்சுக்கள் அடிபட்டன. ஆனால் நடக்கவில்லை.

கடைசியில் ஐபிஎல் தொடருக்கு வந்து விடுவார் என்றும் சில வதந்திகள் எழுந்தன. மீண்டும் அறுவைசிகிச்சை செய்ய வேண்டியுள்ளது. அதனால் பும்ரா ஐபிஎல் தொடரில் விளையாடமாட்டார்கள் என்று பிசிசிஐ திட்டவட்டமாக தெரிவித்தது.

அறுவை சிகிச்சைக்குப் பிறகு, மெல்ல மெல்ல குணமடைந்து தற்போது பயிற்சியிலும் ஈடுபட்டு வருகிறார் பும்ரா. இந்திய தேசிய அகடமியில் பயிற்சி செய்து வரும் அவர் மீண்டும் எப்போது இந்திய அணிக்கு திரும்புவார்? காயம் எப்போது குணமடையும்? ஆகிய கேள்விகளுக்கு பதில் கொடுத்திருக்கிறார் இந்திய தேசிய அகடமி அதிகாரி ஒருவர்.

“ஜஸ்பிரீத் பும்ராவிற்கு ஏற்பட்டுள்ள காயம் மற்றவர்களுக்கு இருப்பதைப்போல இயல்பானது அல்ல. முற்றிலும் மாறுபட்டது என்பதால் எளிதில் எப்போது முழுமையாக குணமடைவார் என்று சொல்ல இயலாது. இப்போது ஓரளவிற்கு குணமடைந்து உடற்பயிற்சி மற்றும் பந்துவீச்சு பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

தினமும் குறைந்தபட்சம் ஏழு ஓவர்கள் பந்து வீசுகிறார். அதை முடித்தவுடன் மீண்டும் காயம் அடைந்துவிடாமல் இருக்க உடற்பயிற்சி செய்கிறார். நல்ல முன்னேற்றம் கண்டிருக்கிறார். தினமும் மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகளால் கண்காணிக்கப்பட்டு வருகிறார்.

இன்னும் சில தினங்களில் பயிற்சி போட்டிகள் நடைபெற உள்ளது. அதில் பும்ரா விளையாட வைக்கப்படுவார். பயிற்சி போட்டிக்கு பிறகு அவரது உடல்நிலை எப்படி இருக்கிறது என்பதை பொறுத்து மீண்டும் எப்போது இந்திய அணிக்கு திரும்புவார் என்பது முடிவு செய்யப்படும்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடர் முடிவுற்ற பிறகு அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடர் நடைபெறுகிறது. அதில் பும்ராவை விளையாட வைக்கலாம் என்று திட்டமிட்டிருக்கிறோம். அதற்கு முன்பு பும்ராவின் உடல்நிலை பயிற்சி போட்டிகளுக்கு பிறகு எப்படி இருக்கும் என்பதை பொறுத்து முடிவு எடுக்கப்படும்.” என அதிகாரி தெரிவித்தார்.

Mohamed:

This website uses cookies.