யாருக்கும் கிடைக்காத அதிர்ஷ்டம்… டி.20 போட்டிகளில் மிகப்பெரும் சாதனை படைத்த ஜஸ்ப்ரிட் பும்ராஹ்
அயர்லாந்து அணியுடனான டி.20 தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள பும்ராஹ், முதல் போட்டியிலேயே சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
அயர்லாந்து சென்றுள்ள பும்ராஹ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, அயர்லாந்து அணியுடன் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் போட்டி அயர்லாந்தின் டப்லின் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டனான பும்ராஹ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணிக்கு, பாரி மெக்ராத்தி 51* ரன்களும் மற்றும் கர்டிஸ் சாம்பர் 39 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த அயர்லாந்து அணி 139 ரன்கள் எடுத்தது.
பந்துவீச்சில் இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக பும்ராஹ், பிரசீத் கிருஷ்ணா மற்றும் ரவி பிஸ்னோய் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதன்பின் 140 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய இந்திய அணி, 6.5 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 47 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. மழை நீண்டநேரம் நிற்காததால் போட்டியும் பாதியிலேயே முடித்து கொள்ளப்பட்டது. இதனால் இந்திய அணி DLS முறைப்படி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கிட்டத்தட்ட 11 மாதங்களுக்கு பிறகு மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியுள்ள பும்ராஹ், தான் வீசிய முதல் ஓவரிலேயே 2 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தியதன் மூலம் போட்டியின் ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.
இந்தநிலையில், கேப்டனாக தனது முதல் போட்டியிலேயே ஆட்டநாயகன் விருது பெற்ற பும்ராஹ், இதன் மூலம் சர்வதேச டி20 போட்டியில் கேப்டனாக அறிமுகமான முதல் ஆட்டத்திலேயே, ஆட்ட நாயகன் விருதை வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பும்ரா பெற்றுள்ளார்.
இந்திய டி20 அணியின் கேப்டனாக சேவாக், டோனி, ரெய்னா, ரகானே, விராட் கோலி, ரோகித் சர்மா, தவான், ரிஷப் பண்ட், கேஎல் ராகுல், பாண்ட்யா ஆகியோர் செயல்பட்டுள்ளனர். ஆனால் இந்த சாதனையை பும்ரா மட்டுமே நிகழ்த்தியுள்ளார்.