இவரால் மூன்று பார்மெட்டிலும் நன்றாக ஆடமுடியாது; இந்திய நட்சத்திரத்தை தாக்கிப்பேசிய பாக்., முன்னாள் வீரர்! காண்டான இந்திய ரசிகர்கள்..
இந்த இந்திய பவுளரால் மூன்றுவித கிரிக்கெட் போட்டிகளிலும் சரியாக தாக்குப் பிடிக்க இயலாது என கடுமையாக சாடியுள்ளார் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் சோயிப் அக்தர்.
ஐபிஎல் தொடர் மூலம் இந்திய அணிக்கு கிடைத்த மிகச் சிறந்த பவுலர்களுள் ஒருவர் ஜஸ்பிரித் பும்ரா. அவர் தனது அசாத்திய திறமையால் இந்திய அணிக்கு மூன்றுவித கிரிக்கெட் போட்டிகளிலும் ஆடிவருகிறார். அதுமட்டுமில்லாமல் நம்பிக்கை நட்சத்திரமாகவும் இருக்கிறார்.
குறிப்பாக, 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி அரையிறுதிப் போட்டி வரை நகர்வதற்கு பும்ராவின் பந்துவீச்சு ஒரு காரணம் ஆகும். அதிக அளவில் விக்கெட்டுகளை வீழ்த்தவில்லை என்றாலும் ரன்களை கட்டுப்படுத்துவதில் கைதேர்ந்தவர்.
இந்திய அணிக்காக குறுகிய காலத்திலேயே இத்தகைய சிறந்த வீரராக உருவாகியிருக்கும் பும்ராவின் பந்துவீச்சு ஆக்சன் மற்றவர்களை விட சற்று மாறுபட்டதாகவே இருக்கிறது. இருப்பினும் அந்த ஆக்ஷனை கொண்டு மிகச்சிறந்த அளவில் வேகமாக பந்து வீசி வருகிறார்.
இந்நிலையில் பும்ரா பந்துவீச்சு ஆக்சன் குறித்து கடுமையான விமர்சனத்தையும் தனது கருத்தையும் முன் வைத்திருக்கிறார் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர். அவர் கூறுகையில், “ஜஸ்பிரித் பும்ரா நல்ல பந்து வீச்சாளராக இருந்தாலும், அவரால் மூன்றுவித போட்டிகளிலும் தாக்குப் பிடிக்க இயலாது. அவரது பந்துவீச்சு ஆக்சன் முறையானதாக இல்லை. இதனால் அவர் அதிக அளவில் காயம் அடைய வாய்ப்பிருக்கிறது. குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில் அவரால் நீண்டகாலம் ஆடுவதற்கு இயலாது. அவர் குறுகிய தூரம் ஓடி வந்து பந்து வீசினாலும் அதிக அளவில் வேகமாக வீச முயற்சிப்பதால் அவரது முதுகுப்பகுதி அதிக அழுத்தத்தை தாங்கி வருகிறது. இதனால் அவர் காயம் அடைவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.
இதன்காரணமாக, லிமிடெட் ஓவர் போட்டிகளில் அவரால் ஆட முடிந்தாலும், டெஸ்ட் போட்டிகள் போன்ற நீண்ட போட்டிகளில் அவரால் நீண்ட காலம் தாக்குப் பிடிக்க இயலாது என்பதே எனது கருத்து.” என கூறியிருக்கிறார்.