இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெற்று வரும் 12-ஆவது ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது அரையிறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியா, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூஸிலாந்து உள்ளிட்டவை அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளன.
புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள இந்தியாவுடன், நான்காவது இடத்தில் உள்ள நியூஸிலாந்து மோதுகிறது. மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் ஆட்டம் நடைபெறுகிறது.
டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் மயங்க் அகர்வால், கெதர் ஜாதவ், குல்தீப் யாதவ், ஷமி ஆகியோர் இடம்பெறவில்லை. கடந்த ஆட்டத்தில் விளையாடிய குல்தீப் யாதவுக்குப் பதிலாக சஹால் இடம்பெற்றுள்ளார். நியூஸிலாந்து அணியில் செளதிக்குப் பதிலாக ஃபெர்குசன் இடம்பெற்றுள்ளார்.
இந்நிலையில் நியூஸிலாந்துக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் புவனேஸ்வர் குமாரும் பும்ராவும் வீசிய முதல் இரு ஓவர்களும் மெயிடன்களாக இருந்தன. இதன் மூலம் இந்த உலகக் கோப்பைப் போட்டியில் அதிக மெயிடன் ஓவர்களை வீசிய வீரர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார் பும்ரா.
2019 உலகக் கோப்பை: அதிக மெயிடன் ஓவர்களை வீசிய வீரர்கள்
9 – பும்ரா
8 – ஆர்ச்சர்
6 – கம்மின்ஸ், வோக்ஸ்
5 – அமிர், மாரிஸ், ஸ்டார்க்.
பும்ரா 9 மெயிடன் ஓவர்களை வீசியிருக்க, இதர இந்தியப் பந்துவீச்சாளர்கள் மொத்தமாக ஆறு மெயிடன் ஓவர்களை வீசியுள்ளார்.
இதுதவிர இந்த உலகக் கோப்பைப் போட்டியில் முதல் பவர்பிளேயில் (1-10 ஓவர்கள்) குறைந்த ரன்கள் கொடுத்த அணி என்கிற பெருமையும் இந்திய அணிக்குக் கிடைத்துள்ளது.
இன்றைய ஆட்டத்துடன் முதல் 10 ஓவர்களில் இந்திய அணியின் எகானமி 3.91 ரன்கள் ஆக உள்ளது. இந்தியாவுக்கு அடுத்த இடத்தில் இங்கிலாந்து அணி முதல் 10 ஓவர்களில், ஒரு ஓவருக்கு 4.52 ரன்கள் கொடுத்துள்ளது.
லீக் சுற்றில் இந்திய அணி முதலிடம் பிடிப்பதற்கு அதன் பந்துவீச்சும் முக்கியக் காரணம். பும்ராவின் பந்துவீச்சு இந்திய அணிக்குக் கூடுதல் பலம் அளித்துள்ளதை இதுபோன்ற புள்ளிவிவரங்கள் எடுத்துரைக்கின்றன.