பும்ராவை போல பந்துவீசி அசத்தும் மூதாட்டி ஒருவரின் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
உலகின் நம்பர் 1 வேகப்பந்துவீச்சாளராக வளம் வருபவர் இந்தியாவின் இளம் வீரர் ஜஸ்பிரீத் பும்ராஹ். இவர் உலகக்கோப்பை தொடரில் மிக சிறப்பாக செயல்பட்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அரையிறுதியில் நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணி பந்துவீச்சில் அபாரமாக செயல்பட்டது. குறிப்பாக பும்ராஹ் மற்றும் ஜடேஜா இருவரும் நன்றாக பந்துவீசி ரன்களையும் கட்டுப்படுத்தினர். ஆனால், துரதிஷ்டவசமாக இந்தியா 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி தொடரை விட்டு வெளியேறியது.
உலகக்கோப்பை தொடரில் பும்ராஹ் 9 இன்னிங்சில் 18 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இவரது சராசரி வெறும் 20.61 ஆகும். மேலும் எக்கனாமி ரேட் 4.42 மட்டுமே.
பும்ரா பந்துவீச்சை எதிரணி வீரர்கள் தொடவே பலரும் யோசித்தனர். பும்ராவின் பந்துவீச்சு அடிக்க முடியாத நிலையில் இருக்கிறது என்றும் அவர் பந்துவீச்சில் கவனமாக ஆட வேண்டும் என்று நியூசிலாந்து வீரர்களுக்கு அந்த அணியின் முன்னாள் கேப்டன் டேனியல் வெட்டோரி போட்டிக்கு முன்பாக எச்சரிக்கையும் விடுத்தார். இலங்கைக்கு எதிரான போட்டியின்போது, வேகமாக 100 விக்கெட்டுகளை சாய்த்த இரண்டாவது இந்திய வீரர் என்ற சாதனையை பும்ரா படைத்தார்.
தனது தனித்துவமான பந்துவீச்சு ஸ்டைல் மூலம் அனைவரையும் கவர்ந்த பும்ரா, தற்போது ஒரு மூதாட்டியையும் கவர்ந்துள்ளார். பும்ராவின் பந்துவீச்சு ஸ்டைலில் ஈர்க்கப்பட்ட மூதாட்டி அவரைப்போல பந்துவீச ஓடிவரும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை ஜஸ்ப்ரீத் பும்ராவும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.