அண்டர் 19 டி20 உலககோப்பை இறுதி போட்டிக்குள் நுழைந்த இந்திய பெண்கள் அணியிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பேசியுள்ளார் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா.
சர்வதேச பெண்கள் கிரிக்கெட் போட்டிகளில் பல முன்னேற்றங்கள் நடைபெற்று வருகிறது. பெண்கள் ஐபிஎல் இந்த வருடம் நடைபெறுகிறது. இதற்காக ஐபிஎல் அணிகள் பெண்கள் ஐபிஎல்லில் அணிகளை வாங்குவதற்கு ஏலத்தில் பங்கேற்றதும் குறிப்பிடத்தக்கது.
பல வருடங்களாக 50-ஓவர் பெண்கள் உலகக்கோப்பை மற்றும் அண்டர் 19 50-ஓவர் பெண்கள் உலகக்கோப்பை போன்ற தொடர்கள் நடைபெற்று வந்தது. இந்த வருடம் முதல் முறையாக 19 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கு என்று டி20 உலகக்கோப்பை நடைபெற்று வருகிறது.
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் இந்த டி20 உலகக்கோப்பையில் இந்திய பெண்கள் அணி அறையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது.
மற்றொரு அரையிறுதி போட்டியில் பலம்மிக்க ஆஸ்திரேலியா பெண்கள் அணியை வீழ்த்தி இங்கிலாந்து பெண்கள் அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது. அண்டர் 19 இந்தியா மற்றும் இங்கிலாந்து பெண்கள் அணிகள் வருகிற ஜனவரி 29ஆம் தேதி நடைபெறவிருக்கும் இறுதிப் போட்டியில் பலப்பரிட்சை மேற்கொள்ளவிருக்கின்றன.
சீனியர் இந்திய பெண்கள் அணியில் தன்னுடைய அதிரடியான பேட்டிங் மூலம் பலரின் கவனத்தையும் ஈர்த்த சஃபாலி வர்மா, இந்த அண்டர் 19 பெண்கள் அணிக்கு கேப்டன் பொறுப்பேற்று விளையாடி வருகிறார். மிகச் சிறப்பாகவும் செயல்பட்டு வருகிறார்.
சஃபாலி வர்மா 6 போட்டிகளில் ஒரு அரைசதம் உட்பட 157 ரன்கள் அடித்திருக்கிறார். மற்றொரு இந்திய பெண் வீராங்கனை ஸ்வேதா செராவத் 6 போட்டிகளில் 3 அரைசதங்கள் உட்பட 296 ரன்கள் அடித்து இந்த உலகக் கோப்பையில் அதிக ரன்கள் அடித்தவர் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார்.
இவர்கள் இருவரும் பேட்டிங்கில் அதீத நம்பிக்கையை கொடுத்து வருகின்றனர். பந்துவீச்சில் பர்சவி சோப்ரா, இதுவரை 6 போட்டிகளில் 9 விக்கெட்டுகளை கைப்பற்றி பந்துவீச்சில் பலம் சேர்கிறார். ஒட்டுமொத்தமாக பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டிலும் இந்திய அணி பலமிக்கதாக காணப்படுகிறது.
முதல் அண்டர் 19 டி20 உலக கோப்பையை வென்று வரலாறு படைக்க வேண்டும் என்பதற்காக பல முன்னணி வீரர்கள், வீராங்கனைகள், ஜாம்பவான்கள் அண்டர் 19 பெண்கள் அணிக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றன. இதற்கு மத்தியில் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, வீடியோ கான்பிரன்ஸ் மூலம் அண்டர் 19 பெண்கள் வீராங்கனைகளுடன் உரையாடியுள்ளார். அவர்களுக்கு வாழ்த்துக்களையும் சில அறிவுரைகளையும் கூறியிருக்கிறார்.