நீ போய் உள்ளூர் போட்டிய ஆடிட்டு வா.. 2வது டெஸ்ட் போட்டியிலிருந்து முக்கிய வீரரை நீக்கிய பிசிசிஐ!

2வது டெஸ்ட் போட்டியிலிருந்து ஜெயதேவ் உனட்கட் நீக்கப்பட்டிருக்கிறார். இதற்கான காரணம் என்னவென்று பிசிசிஐ கூறியுள்ளது. இங்கே பார்ப்போம்.

பார்டர் கவாஸ்கர் கோப்பைக்காக இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி நாக்பூர் மைதானத்தில் நடைபெற்றது.

முதல் டெஸ்ட் போட்டியை இந்திய அணி 132 ரன்கள் மற்றும் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது டெஸ்ட் போட்டி வருகிற 17-ஆம் தேதி டெல்லி மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்த டெஸ்ட் அணியில் இடம் பெற்றுள்ள ஜெயதேவ் உனட்கட், முதல் டெஸ்ட் போட்டியின் பிளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. மேலும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து அணி நிர்வாகத்தால் வெளியில் அனுப்பப்பட்டு இருக்கிறார். இந்த முடிவை பிசிசிஐ அனுமதித்திருக்கிறது.

 

ரஞ்சிக் கோப்பை டெஸ்ட் தொடரின் அரையிறுதி சுற்றில் கர்நாடகா அணியை வீழ்த்தி சௌராஷ்டிரா அணியும், மத்திய பிரதேஷ் அணியை வீழ்த்தி பெங்கால் அணியும் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளன.

இறுதிப்போட்டியில் சௌராஷ்டிரா அணிக்கு விளையாடுவதற்காக ஜெயதேவ் உனட்கட் வெளியில் அனுப்பப்பட்டு இருக்கிறார். இவர் கேப்டன் பொறுப்பேற்று விளையாட இருக்கிறார். ஏற்கனவே உனட்கட் தலைமையிலான சௌராஷ்டிரா அணி கடந்த 2019-20 ஆம் ஆண்டுக்கான ரஞ்சிக்கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 2010ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக அறிமுகமான ஜெயதேவ் உனட்கட், அதன் பிறகு சில லிமிடெட் ஓவர் போட்டிகள் விளையாடி இருந்தாலும் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து இடம்பெற முடியாமல் தவித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற வங்கதேசம் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மீண்டும் விளையாட வாய்ப்பு கிடைத்தது. முதல் டெஸ்ட் போட்டியில் விசா காரணமாக விளையாடவில்லை. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடி பந்துவீச்சில் அசத்தினார். அதனால் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் இவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

முதல் டெஸ்ட் போட்டியின் பிளேயிங் லெவனில் இவர் இல்லை. இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் இவர் திட்டத்தில் இல்லை என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. ரஞ்சிக் கோப்பை இறுதி போட்டி முடிவுற்றவுடன் மீண்டும் டெஸ்ட் அணிக்கு திரும்பி விடுவார் என்றும் அணி நிர்வாகத்தினரால் கூறப்பட்டிருக்கிறது

Mohamed:

This website uses cookies.