மாபெரும் உலக சாதனை படைத்தார் இந்திய வீராங்கனை ஜூலன் கோஸ்வாமி
தென் ஆப்ரிக்கா பெண்கள் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் பதுவீச்சாளர் ஜூலன் கோஸ்வாமி புது உலகசாதனை படைத்து அசத்தினார்.
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி, 3 ஒருநாள், 5 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் ஒருநாள் போட்டியில் இந்திய பெண்கள் அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
இந்நிலையில் இரு அணிகள் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி கிம்பர்லியில் நடக்கிறது. இதில் ‘டாஸ்’ வென்ற தென் ஆப்ரிக்க அணி முதலில் ‘பந்துவீச்சை’ தேர்வு செய்தது.
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு மந்தனா 129 பந்தில் 14 பவுண்டரி, 1 சிக்சர் என 135 ரன்கள் விளாசி அவுட்டானார். பின் வந்த ஹர்மன்பிரீத் கவுர் (55*), கிருஷ்ணமூர்த்தி (51*) ஆகியோரும் அரைசதம் அடித்து கைகொடுக்க, இந்திய அணி 50 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 302 ரன்கள் குவித்தது. மந்தனா ஒருநாள் அரங்கில் தனது 2வது சதத்தை பூர்த்தி செய்தார்.
இந்நிலையில் இப்போட்டியில் தனது முதல் விக்கெட்டை கைப்பற்றிய இந்திய பெண்கள் அணியின் சீனியர் வீராங்கனைகளில் ஒருவரான ஜூலன் கோஸ்வாமி, ஒருநாள் அரங்கில் தனது 200வது விக்கெட்டை பதிவு செய்தார். இதன் மூலம் சர்வதேச பெண்கள் கிரிக்கெட் ஒருநாள் அரங்கில் 200 விக்கெட் கைப்பற்றிய முதல் வீராங்கனை என்ற புதிய உலக சாதனை படைத்தார்.
இதே போல் ஆண்களுக்கான ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் 200 விக்கெட் கைப்பற்றிய முதல் வீரர் என்ற பெருமையை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ்வையே சாரும் என்பது குறிப்பிடத்தக்கது.