உலகக் கோப்பை போட்டிகளில் மூன்று சதங்கள் அடித்த முதல் இங்கிலாந்து வீரர் என்ற பெருமையை ஜோ ரூட் பெற்றுள்ளார்.
உலகக் கோப்பை தொடரில் சவுதாம்டன் நகரில் நேற்று நடைபெற்ற போட்டியில் வெஸ்ட் இண்டீஸ்- இங்கிலாந்து அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 44.4 ஓவர்களில் 212 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகப்பட்சமாக பூரன் 63 ரன்கள் விளாசினார். இதனையடுத்து 213 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணி தொடக்கம் முதலே ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்தியது.
தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ஜோ ரூட் அசத்தலான விளையாடினார். இவர் ஒருநாள் போட்டியில் தனது 16ஆவது சதத்தை பதிவு செய்தார். இறுதியில் இங்கிலாந்து அணி 33.1 ஓவர்களிலேயே வெற்றி இலக்கை எட்டியது. இந்தப் போட்டியில் சதம் அடித்ததன் மூலம் உலகக் கோப்பை தொடரில் மூன்று சதங்கள் அடித்த முதல் இங்கிலாந்து வீரர் என்ற சாதனையை ஜோ ரூட் படைத்தார். இவர் நடப்பு உலகக் கோப்பையில் 2 சதங்களும் 2015 உலகக் கோப்பையில் ஒரு சதமும் அடித்துள்ளார்.
மேலும் இந்த ஆண்டில் விளையாடியுள்ள 13 ஆட்டங்களில் 52.75 சராசரியுடன் அவர் 633 ரன்கள் குவித்துள்ளார். இந்தாண்டு இந்திய கேப்டன் விராட் கோலி 13 ஆட்டங்களில் 54.69 சராசரியுடன் 711 ரன்கள் குவித்து முதலிடத்தில் உள்ளார். கடந்த 2017 சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு பிறகு தற்போது வரை விராட் கோலி, ஜோ ரூட் மற்றும் கேன் வில்லியம்சன் ஆகியோர் வெறும் 9.3 சதவிகிதம் தான் தவறான ஷாட்டுகளை ஆடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்கிந்தியத்தீவுகள் அணியைப் பொருத்தவரை முரட்டுத்தனமான ஆக்ரோஷம், ஆவேசம் மட்டுமே களத்தில் இருக்கிறதே தவிர ஸ்மார்ட் கிரிக்கெட் இல்லை.
களத்துக்கு வரும் பேட்ஸ்மேன்கள் அனைவரும் சிக்ஸர், பவுண்டரிகள் அடிக்கத்தான் ஆசைப்படுகிறார்களேத் தவிர ஸ்ட்ரைக்கை மாற்றி, பாட்னர்ஷிப்பை உருவாக்க வேண்டும், ஒரு ரன், 2 ரன்களின் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும் என்ற நோக்கம் இல்லாமல் பேட் செய்கிறார்கள். இதனால்தான் எந்த விக்கெட்டும் நிலைக்க முடியாமல் இருக்கிறது.
குறிப்பாக கெயில், ரஸல், ஹோப் ஆகியோர் ஒருரன், 2 ரன் எடுப்பதற்கு அதிகமான சோம்பேறித்தனம் செய்கிறார்கள். மோசமான பந்துகளை மட்டும் பவுண்டரி, சிக்ஸருக்கு அடித்துவிட்டு, மற்ற பந்துகளை சிங்கில் ரன்களாக மாற்றினாலே ரன்களும் சேரும்,களத்திலும் நிற்க முடியும். இந்த நுணுக்கம் இல்லாதவரை திறமை இருந்தும், பவர் ஹிட்டர்ஸ் இருந்தும் பயனில்லை.
காரனணம் என்ன?
ரஸல், ஹோல்டர், கெயில்,லூயிஸ், பிராத்வெய்ட் போன்ற பேட்ஸ்மேன்கள் தங்களுடன் விளையாடும் வீரர்களுடன் பாட்னர்ஷிப்பை வரும் போட்டிகளில் உருவாக்கினால்தான் மீள முடியும். இல்லாவிட்டால் , மேற்கிந்தியத்தீவுகள் அணி சராசரி அணியாகவே கருதப்படும்.
பந்துவீச்சிலும் மேற்கிந்தியத்தீவுகள் அணியின் கடந்த போட்டியின் ஆவேசம் காணப்படவில்லை. ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக காட்ரெல், ரஸல், தாமஸ், கேப்ரியல் ஆகியோரின் வேகப்பந்துவீச்சில் பந்துகள் எகிறின. ஆனால், நேற்றைய ஆட்டத்தில் இவர்களின் துல்லியத்தன்மை, பவுன்ஸர் எங்கே சென்றது எனத் தெரியவில்லை. 7பந்துவீச்சாளர்கள் பந்துவீசியும் அனைவரும் சராசரியாக 7 ரன்களை வாரிக்கொடுத்துள்ளார்கள்.
இங்கிலாந்து அணி இப்போது இருக்கும் சூப்பர் ஃபார்மில், இதுபோன்ற குறைந்த ஸ்கோரை அடித்துவிட்டு, பந்துவீச்சில் கட்டுப்படுத்தலாம் என்று நினைப்பது அறிவீனம். இங்கிலாந்து அணிக்கு நாங்கள் சளைத்தவர்கள் இல்லை என்பதைப் போல் நேற்று மேற்கிந்தியத்தீவுகள் பந்துவீச்சாளர்கள் 15 வைடுகளை வீசியுள்ளார்கள். இன்னும் பந்துவீச்சில் ஒழுக்கமின்மை, கட்டுக்கோப்பு இ்ல்லாமை ஆகிய தொடர்வதால், தோல்வியும் தொடர்கிறது.