உங்க ஊருல விராட்கோலின்னா.. எங்களுக்கு இவரு – மார்தட்டிக்கோங்க ஜோ ரூட்!
இந்தியாவிற்கு விராட்கோலி இருப்பது போல எங்கள் அணியில் இவர் இருக்கிறார் என பெருமிதமாக பேசியுள்ளார் ஜோ ரூட்.
2017 ஆம் ஆண்டு இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற விராட் கோலி, இந்திய அணியின் வீரர்கள் ஒவ்வொருவரும் மிகச் சிறப்பாக செயல்பட்டே ஆகவேண்டும்; அதேபோல் அவர்கள் உடல்தகுதி ரீதியாகவும் மிகவும் ஃபிட்டாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வீரர்களை அணுகுகிறார்.
அதற்காக போட்டிகளின் போதும் வீரர்களை உற்சாகப்படுத்த விராட் கோலி தவறியதில்லை. இளம் தலைமுறையினருக்கு சிறந்த கேப்டனாக விளங்கி வருகிறார். கேப்டன் பொறுப்பில் மட்டுமல்லாது; தனிப்பட்ட பேட்டிங்கிலும் விராட் கோலியின் செயல்பாடு இன்றியமையாததாக இருக்கிறது.
பொதுவாக, வீரர் கேப்டன் பொறுப்பை ஏற்கையில் அவரது பேட்டிங் சற்று ஆட்டம் காணும். ஆனால் அந்த விஷயத்தில் விராட் கோலி விதிவிலக்கானவர்கள். கேப்டன் பொறுப்பை ஏற்ற பிறகும் பேட்டிங்கில் அசாத்தியமாக ஆடி வருகிறார்.
இந்நிலையில் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸை இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியுடன் ஒப்பிட்டு பேசியுள்ளார் தற்போதைய இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் ஜோ ரூட்.
அவர் கூறுகையில், “விராட் கோலி இந்திய அணியில் எப்படி அனைவரும் களத்தில் இறங்கி சிறப்பாக செயல்பட வேண்டும் என எதிர்பார்கிறாரோ? அதேபோல் பென் ஸ்டோக்ஸ் அணியில் இருக்கும் அனைத்து வீரர்களும் களமிறங்கி சிறப்பாக செயல்பட வேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடியவர்.
பென் ஸ்டோக்ஸ் என்னைவிட சிறந்த கேப்டன் என நான் நினைக்கிறேன். ஏனெனில் அவரது தனிப்பட்ட பேட்டிங் மற்றும் தலைமை பண்பு என அனைத்தையும் நான் முன் நின்று பார்த்துக்கொண்டிருக்கிறேன். அணியில் தன்னை முன்னிலைப்படுத்தி எடுத்துச் செல்வதில் பென்ஸ்டோக்ஸ் சிறந்தவர்.
தற்போது அணியில் துணைக் கேப்டனாக இருக்கிறார். அவருக்கு வீரர்களின் மத்தியில் அதிக மதிப்பு இருக்கிறது. போட்டி என்று வந்துவிட்டால் இறுதிவரை போராடி வெல்லக் கூடியவர். லிமிடெட் ஓவர் போட்டிகளில் மட்டுமல்லாது. டெஸ்ட் போட்டிகளிலும் மிகச் சிறப்பாக ஆடி அணியை வெற்றிப்பாதைக்கு எடுத்துச் செல்லக் கூடியவர்.” என கூறினார்.
ஊரடங்கிற்கு பிறகு, ஜூலை 8ம் தேதி இங்கிலாந்து அணி முதல் முறையாக கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கிறது. 3 போட்டிகள் கொண்ட தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்கொள்கிறது. வெஸ்ட் இண்டீஸ் வீரர்களும் இங்கிலாந்து வந்தடைந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.