இந்திய அணியின் இளம் அதிரடி பேட்ஸ்மேன் யாஷ்துல் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சரை எதிர்கொள்வதற்கு காத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
சமீபமாக நடந்து முடிந்த 19 வயதிற்குட்பட்ட உலக கோப்பை தொடரில் பேட்டிங் மற்றும் கேப்டன்ஷிப்பில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணி கோப்பையை வெற்றி பெற்றுக் கொடுத்த இளம் வீரர் யாஷ்துல் 2022 ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக 50 லட்ச ரூபாய் ஏலத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ரஞ்சி கோப்பையில் டெல்லி அணிக்காக விளையாடும் யாஷ்துல் தனது அறிமுக போட்டியிலேயே அடுத்தடுத்து தொடர்ச்சியாக இரண்டு சதங்களை அடித்து இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் பேசுபொருளாக திகழ்கிறார்.
குறிப்பாக தமிழ்நாடு அணிக்கு எதிரான போட்டியில் பலம் வாய்ந்த தமிழ்நாடு அணியின் பந்து வீச்சாளர்களை மிக லாவகமாக கையாண்ட யாஷ்துல் சதம் அடித்து அசத்தியுள்ளார்.
மேலும் போட்டி முடிந்த பின் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய யாஷ்துல் ஜோஃப்ரா ஆர்ச்சரின் பந்து வீச்சை எதிர்கொள்ள ஆவலாக காத்துக் கொண்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
அதில், 2022 ஐபிஎல் தொடரில் என்னை டெல்லி அணி தான் ஏலத்தில் எடுக்கும் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தேன், அதேபோன்று டெல்லி அணி என்னை அணியில் இணைத்துக் கொண்டது. தற்பொழுது நான் டெல்லி அணியின் ஒரு அங்கமாக திகழ்ககிறேன், மேலும் டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்கின் பயிற்சியின் கீழ் விளையாடுவதற்கு மிகவும் ஆவலாக உள்ளேன் என்று தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், இந்த ஐபிஎல் தொடரில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் பந்து வீச்சை எதிர்கொள்ள வேண்டும் என்று மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டுள்ளேன், ஏனென்றால் ஆர்ச்சர் மிக வேகமாகவும் துல்லியமாகவும் பந்துவீச கூடிய ஒரு சிறந்த வேகப்பந்துவீச்சாளர். அதேபோன்று டெல்லி அணியில் தேர்வு செய்யப்பட்டிருக்கும் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் டேவிட் வார்னருடன் பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடவேண்டும் என்றும் ஆவலாக உள்ளேன் என்றும் யாஷ்துல் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.