ஆர்.சி.பி அணிக்கு பின்னடைவு.. ஆஸ்திரேலிய வீரர் திடீரென ஐபிஎல் தொடரிலிருந்து விலகல்!
ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இருந்து திடீரென தனது சொந்த காரணங்களுக்காக ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜோஸ் பிலிப் விலகியிருக்கிறார். அவருக்கான மாற்று வீரரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அறிவித்திருக்கிறது.
ஐபிஎல் தொடரின் 13வது சீசன் வருகிற ஏப்ரல் 9ஆம் தேதி துவங்கி கிட்டத்தட்ட ஒரு மாத காலம் நடைபெறவிருக்கிறது. போட்டிகளுக்கான அட்டவணை இன்னும் சில தினங்களில் வெளியிடப்பட இருக்கின்றன. அணிகள் தங்களுக்கு தேவையான வீரர்களை தக்க வைத்ததோடு மட்டுமல்லாமல் இந்த ஆண்டு சிறிய அளவில் நடைபெற்ற ஏலத்தில் போதுமான வீரர்களையும் எடுத்துக்கொண்டது. குறிப்பாக ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் வியக்கத்தக்க விதமாக சில வீரர்களை ஏலத்தில் எடுத்தது.
அதில் குறிப்பிடத்தக்க வகையில், ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் மேக்ஸ்வெல் 14.25 கோடிக்கு எடுக்கப்பட்டார். அடுத்ததாக நியூசிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் கைல் ஜேமிஷன் 15 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். மற்றுமொரு ஆஸ்திரேலிய வீரர் கிறிஸ்டியன் 4.8 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டிருந்தார். இவை பெரிய அளவில் கவனம் ஈர்த்ததாகும்.
இதைத்தொடர்ந்து பெங்களூர் அணியில் இடம்பெற்றிருந்த 23 வயதான ஜோஸ் பிலிப் ஆஸ்திரேலிய அணியின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆவார். இவர் கடந்த ஐபிஎல் சீசனில் பெங்களூர் அணிக்காக 78 ரன்கள் எடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கும் இவரது பெயர் முதலில் இடம் பெற்றிருந்த நிலையில், தற்போது இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து தனது சொந்த காரணங்களுக்காக விலகிக் கொள்வதாக அவர் தெரிவித்திருக்கிறார்.
இதனால் அவரது பெயரை எடுத்துவிட்டு அவரின் மதிப்பிற்கு ஏற்றவாறு மற்றொரு வீரரை பெங்களூரு அணி எடுத்திருக்கிறது.
நியூசிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் பின் ஆலன் மாற்று வீரராக அறிவிக்கப்பட்டு இருக்கிறார். இவர் இந்த ஆண்டு சூப்பர் ஸ்மாஷ் லீக் தொடரில் 11 இன்னிங்ஸ்களில் 512 ரன்கள் அடித்து அதிக ரன்கள் குவித்த வராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து பெங்களூரு அணி வெளியிட்ட அறிக்கையில், “ஜோஸ் பிலிப் ஐபிஎல் தொடரில் இருந்து சொந்த காரணங்களுக்காக விலகி இருக்கிறார். அவர் 20 லட்சத்திற்கு அணியில் எடுக்கப்பட்டார். அதே தொகைக்கு தற்போது நியூசிலாந்து அணியின் வீரர் பின் ஆலன் மாற்று வீரராக எடுக்கப்பட்டு இருக்கிறார்.” என குறிப்பிட்டு இருந்தனர்.