இந்திய அணியின் அனுபவம் வாய்ந்த நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் அனைத்துவிதமான தொடர்களிலிருந்தும் ஓய்வை அறிவித்துள்ளார்.
இந்திய அணியின் அனுபவம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் இந்திய அணிக்காக மூன்று விதமான தொடர்களில் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணிக்கு பல வெற்றிகளை பெற்று கொடுத்துள்ளார். மேலும் 2003,2007 மற்றும் 2011 இல் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரிலும் இந்திய அணிக்காக பங்கேற்று விளையாடி உள்ளார்.
டெஸ்ட் தொடரில் செய்த சாதனை
டெஸ்ட் தொடரில் பல சாதனைகளைப் படைத்த ஹர்பஜன்சிங் 103 போட்டிகளில் பங்கேற்று 417 விக்கெட்களை வீழ்த்தி இந்திய அணிக்காக அதிகமான விக்கெட்டை வீழ்த்திய வீரர் என்ற வரிசையில் நான்காவது இடத்தில் இடம்பெற்றுள்ளார்.குறிப்பாக அதில் 25 முறை 5 விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.
பேட்டிங்கிலும் அதிரடி காட்டும் ஹர்பஜன்சிங் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இரண்டு சதங்கள் அடித்துள்ளார்.
ஒருநாள் மற்றும் டி20 தொடரில் செய்த சாதனை
இந்திய அணிக்காக 236 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்ற ஹர்பஜன்சிங் 269 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்,மேலும் 28 டி 20 போட்டிகளில் பங்கேற்ற இவர் 25 விக்கெட்களை வீழ்த்தி அசத்தியுள்ளார்.
ஐபிஎல் பயணம்
ஐபிஎல் தொடரில் சென்னை, கொல்கத்தா, பஞ்சாப் மற்றும் மும்பை போன்ற அணிகளில் விளையாடிய ஹர்பஜன் 163 போட்டிகளில் விளையாடி 150 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார், கடந்த 2021 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக தேர்வு செய்யப்பட்ட இவர் வெறும் மூன்று போட்டிகளில் மட்டுமே பங்கேற்று விளையாடினார், அதற்குப்பின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இவருக்கு ஒரு போட்டியில் கூட விளையாட வாய்ப்பு அளிக்கவில்லை
இந்திய அணியிலிருந்து புறக்கணிப்பு
2013 உலக கோப்பை தொடருக்குப் பின் இந்திய அணியிலிருந்து புறக்கணிக்கப்பட்டு வந்த ஹர்பஜன்சிங் கடைசியாக 2016 ஆம் ஆண்டு துபாய் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் பங்கேற்று விளையாடினார், அதற்கு பின் இவர் இந்திய அணிக்காக ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை.
இந்த நிலையில் அனைத்து விதமான தொடரில் இருந்து ஓய்வு அறிவிப்பதாக ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டிருந்த பதிவில்,அனைத்து விதமான நல்லதுக்கும் ஒரு முடிவு உண்டு, என்னுடைய இருபத்தி மூணு வருட நீண்ட நெடிய கிரிக்கெட் பயணத்தை அழகாக்கிய அனைவருக்கும் என் இதயம் கனிந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்திருந்தார், இதனால் இவருடைய எதிர்கால வாழ்க்கை ரசிகர்கள் பெரும்பாலானோர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.