ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக ஜஸ்டின் லங்கர் நியமனம் !!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக ஜஸ்டின் லங்கர் நியமனம்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஜஸ்டின் லங்கர் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமீபத்தில் தென் ஆப்ரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்காவுடன் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது.

இந்த தொடரின் மூன்றாவது போட்டியின் போது ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரரான கெமிரான் பெனிகிராப்ட் மர்ம பொருள் ஒன்றை வைத்து பந்தை சேதப்படுத்தினார். பெனிகிராப்ட் பந்தை சேதப்படுத்துவது வீடியோவில் தெளிவாக பதிவாகி அவரை கையும் களவுமாக சிக்க வைத்தது.

கிரிக்கெட் உலகில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பெனிகாராப்ட், ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்மித் மற்றும் நிர்வாகத்திற்கு தெரிந்தே இந்த செயலில் ஈடுபட்டுவதாக தெரிவித்தார், இதனை ஸ்டீவ் ஸ்மித்தும் ஒப்புக்கொண்டார்.

இதனையடுத்து ஸ்மித், வார்னர் மற்றும் பெனிகிராப்டை ஐ.சி.சி., குறைந்தபட்ச தண்டையோடு மன்னித்து விட்டாலும், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஸ்மித், வார்னர் ஒரு வருடம் கிரிக்கெட் விளையாட தடையும், பெனிகிராப்ட் 9 மாதங்கள் கிரிக்கெட் விளையாட தடையும் விதித்தது.

இது குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அமைத்த விசாரணை குழுவின் முடிவில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்திற்கும் அந்த அணியின் அப்போதைய தலைமை பயிற்சியாளரான டேரன் லீமேனிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தெரிவித்து அவரை இந்த சர்ச்சையில் இருந்து விடுவித்தாலும், குற்ற உணர்ச்சி காரணமாக டேரன் லீமேன் தானாக முன்வந்து தனது  தலைமை பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தில் இருந்து ஒதுங்கி கொண்டார்.

இந்நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைமை பயிற்சியாளராக ஆஸ்திரேலிய அணியின்  முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜஸ்டின் லங்கர் நியமிக்கப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தில் இருந்து வெளியாகியுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை, அடுத்த இரண்டு தினங்களுக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்று தெரிகிறது.

ஜஸ்டின் லங்கர் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்காக 105 டெஸ்ட் போட்டிகளுக்கு மேல் விளையாடியுள்ளார். இது தவிர வெஸ்டர்ன் ஆஸ்திரேலிய போன்ற உள்ளூர் கிரிக்கெட் அணிகள் சிலவற்றிற்கும் பயிற்சியாளராக செயல்பட்டுள்ளார்.

Mohamed:

This website uses cookies.