இந்திய அணியின் ஒரு கால ஜோடி பினிஷர்கள் அல்லது வெற்றி பினிஷிங்கிற்கு அருமையான பங்களிப்பு செய்த இந்திய மிடில் ஆர்டர் வலுவான வீரர்களான யுவராஜ் சிங், மொகமது கைஃப் ஜோடி தங்களது 17 ஆண்டுகளுக்கு முன்னதாக லார்ட்ஸில் ஆடிய அபார இன்னிங்ஸை நினைவுகூர்ந்து சமூக வலைத்தளத்தில் தாங்கள் சேர்ந்து நிற்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து கொண்டனர்.
அதாவது இவர்கள் தற்போது லார்ட்ஸ் மைதானத்துக்குச் சென்ற பொது புகைப்படம் எடுத்துக் கொண்டு லார்ட்ஸ் மைதானத்துடன் கைஃப், யுவராஜ் சேர்ந்து நிற்கும் புகைப்படத்தை சமூகவலைத்தளத்தில் பகிர்ந்தனர்.
அதில், “17 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் சேர்ந்து லார்ட்ஸில். இந்திய அணிக்கு உலகக்கோப்பையை வெல்ல வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். விராட் கோலி மற்றும் வீரர்கள் ஜூலை 14ம் தேதி இங்கு கோப்பையை வெல்வார்கள் என்று நம்புகிறோம்” என்று கைஃப் ட்வீட் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
17 ஆண்டுகளுக்கு முன்பாக லார்ட்ஸில் கைஃப், யுவராஜ் சிங் இருவரும் 324 ரன்கள் வெற்றி இலக்கை, வெற்றி பெற முடியாத இடத்திலிருந்து விரட்டி அசாத்திய வெற்றி பெறச் செய்தனர். நாசர் ஹுசைன் அப்போது இங்கிலாந்து கேப்டன்.
இந்த வெற்றிக்குப் பிறகு லார்ட்ஸ் பெவிலியனில் கங்குலி சட்டையைக் கழற்றி சுழற்றியது பெரும் சர்ச்சையானது நினைவிருக்கலாம். ஆனால் பிளிண்டாஃப் இந்தியாவில் ஒருநாள் தொடரை சமன் செய்த குஷியில் மைதானத்திலேயே சட்டையைக் கழற்றியதற்கு கங்குலி கொடுத்த பதிலடிதான் இது.
இந்நிலையில் அந்தப் போட்டியைத் தோற்றதை இன்னமும் மறக்க முடியாத நாசர் ஹுசைன், கைஃப் பக்க ட்விட்டரைப் பகிர்ந்து “இந்த இருவர் தோன்றும் புகைப்படத்தின் முன்பாக நீங்கள் கண் விழிக்க விரும்ப மாட்டீர்கள். இவர்கள் இருவரைப் பற்றியும் இன்னமும் எனக்கு பயங்கர சொப்பனங்கள் வருகிறது” என்று அந்த இன்னிங்ஸை புகழுமாறு பதிவிட்டுள்ளார்.