இந்தியாவுக்கு போகாதீங்க, உலகக்கோப்பை ஆடாதீங்க; வருவாய் இல்லைன்னா தான் அவங்களுக்கு புத்தி வரும் – கம்ரான் அக்மல் ஆவேசம்!

இந்திய அணி பாகிஸ்தானுக்கு வரவில்லை என்றால் நாமும் அங்கு செல்லக்கூடாது. அப்போதுதான் நாம் யார் என்று பிசிசிஐ-க்கு புரியும் என்று ஆவேசமாக பேசியுள்ளார் முன்னாள் பாகிஸ்தான் வீரர் கம்ரான் அக்மல்.

இந்த வருடம் ஆசியக் கோப்பை தொடர் பாகிஸ்தான் நாட்டிலும், 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் இந்தியாவிலும் நடைபெறுகிறது. இதனால் மிகப்பெரிய சிக்கலே ஏற்பட்டிருக்கிறது.

உள்நாட்டு விவகாரங்கள் காரணமாக, கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு மேலாக இந்திய அணி பாகிஸ்தானுக்கும் பாகிஸ்தான் அணி இந்தியாவிற்கும்  சுற்றுப்பயணம் மேற்கொள்வதில்லை. ஆகையால் இந்த இரு அணிகளுக்கும் இடையேயான இருதரப்பு தொடர் பல ஆண்டுகளாக நடைபெறாமல் இருக்கிறதும்

இவ்விரு அணிகளும் ஐசிசி நடத்தும் போட்டிகளில் மட்டுமே மோதிக் கொள்கின்றன. இதுவரை வெளிநாடுகளில் நடைபெற்றது. ஆகையால் பொது இடங்கள் என்பதால் அங்கு மோதிக்கொண்டன. இம்முறை பாகிஸ்தானிலும் இந்தியாவிலும் ஆசியகோப்பை, உலகக்கோப்பை முறையே நடைபெறுகிறது. இதனால் அங்கு சென்று விளையாடலாமா? வேண்டாமா? என்கிற விவாதங்கள் கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது.

பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அளித்த பேட்டியில், “எக்காரணம் கொண்டும் இந்திய அணி பாகிஸ்தானுக்கு பயணிக்காது. பொது இடங்களில் ஆசியகோப்பை நடத்தினால் மட்டுமே இந்திய அணி பங்கேற்கும்.” என்று தெரிவித்தார்.

இதற்கு அப்போதைய சேர்மன் ரமீஷ் ராஜா பதில் அளித்தார். அதில், “இந்திய அணி பாகிஸ்தானுக்கு வரவில்லை என்றால் நாங்களும் இந்தியாவிற்கு வந்து உலகக்கோப்பையில் பங்கேற்க மாட்டோம். இதனால் வருவாய் பெரிய அளவில் பாதிக்கப்படும். அப்போது இந்திய அணிக்கு புரியும்.” என்று தெரிவித்தார். அப்போதும் பிசிசிஐ இந்த விஷயத்தில் பின் வாங்கவில்லை.

இப்போது புதிய சேர்மனாக நியமிக்கப்பட்ட நஜம் சேதி அளித்த பேட்டியில், “பிசிசிஐ எப்படி பிடிவாதமாக இருக்கிறதோ, அதேபோல நாங்களும் பிடிவாதமாக இருக்கிறோம். எங்கள் நாட்டில் உள்ள ரசிகர்கள் பாகிஸ்தானில் ஆசியகோப்பை நடைபெறும் என்று எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர். அவர்களை நாங்கள் ஏமாற்றமாட்டோம். ஆகையால் எங்கள் முடிவில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.” என்றார்.

இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் கம்ரான் அக்மல் இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்திருக்கிறார். அவர் கூறியதாவது:

“இந்திய அணி தங்களது முடிவை மாற்றிக் கொள்ளவில்லை என்றால் நாமும் இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறும் 50 ஓவர் உலகக்கோப்பைக்கு செல்லக்கூடாது. நமது அணிக்கும் மரியாதை இருக்கிறது.

நமது அணியும் 50 ஓவர் உலகக்கோப்பையை வென்றிருக்கிறது. சாம்பியன் டிராபியை வென்றிருக்கிறது. ஐசிசி தரவரிசை பட்டியலில் உயர்ந்த இடத்திலும் இருக்கிறது. நமது வீரர்களும் முதலிடங்களில் இருக்கின்றனர். இந்திய அணி இப்படி பிடிவாதமாக இருக்கும்பொழுது நாமும் நமது உரிமையை விட்டுக் கொடுக்கக் கூடாது. அவர்கள் எவ்வளவு தூரம் செல்கிறார்கள் என்று பார்ப்போம். மரியாதை இல்லாத இடத்தில் நாம் சென்று விளையாடக்கூடாது.” என்று தனது பேட்டியில் கூறினார்.”

Mohamed:

This website uses cookies.