இந்திய அணி கேப்டன் விராட் கோலி தவறுகளில் இருந்து நன்றாக பாடம் கற்றுள்ளார் என பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார்.
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தொடர்ந்து 11 முறை சொந்த மண்ணில் தோல்வியை சந்திக்காமல் தொடர்ச்சியாக டெஸ்ட் தொடரை வென்று சாதனைப் படைத்துள்ளது. இதனால் சோயிப் அக்தர் விராட் கோலியை பாராட்டியுள்ளார்.
விராட் கோலி குறித்து சோயிப் அக்தர் கூறுகையில் ‘‘உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்குப்பின் அவர் சிறந்த கேப்டனாக மாறுவார் என்று ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். ஏனென்றால், அவர் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்டிருக்கிறார். சிறப்பாக கற்று கொண்டிருக்கிறார்.
டீம் காம்பினேசன், பேட்டிங் ஆர்டரை எப்படி அமைப்பது என்பது குறித்து பாடம் கற்றுள்ளார். உலகில் அவர்தான் சிறந்த கேப்டன். ஆனால், அவரைச் சுற்றி அங்கே ஏராளமான மோசமான கேப்டன்கள் உள்ளனர்.
தற்போதைய காலத்தில் சாதாரணமானவர்களை பெரும்பாலான அணிகள் கேப்டன்களாக நியமித்துள்ளது. இதை பார்க்க வேதனையாக உள்ளது. கேன் வில்லியம்சன், விராட் கோலி போன்ற சிறந்த கேப்டன்கள் இல்லை’’ என்றார்.
புனேயில் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 137 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்த டெஸ்ட் போட்டியில் வீரர்கள் செயல்பாட்டின் அடிப்படையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.
இதன்படி டெஸ்ட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் சுமித் 937 புள்ளிகளுடன் ‘நம்பர் ஒன்’ இடத்தில் நீடிக்கிறார். தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் பெரிய அளவில் சோபிக்காததால் சறுக்கலை சந்தித்த இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் ஆட்டம் இழக்காமல் 254 ரன்கள் குவித்து அசத்தினார். இதன் மூலம் விராட்கோலி 37 புள்ளிகள் சேர்த்துள்ளார். விராட்கோலி 936 புள்ளிகள் எடுத்து 2-வது இடத்தில் தொடருகிறார். ஸ்டீவன் சுமித்தை விட விராட்கோலி ஒரு புள்ளி மட்டுமே பின்தங்கி இருக்கிறார். இன்னும் 2 புள்ளிகள் சேர்த்தால் விராட்கோலி மீண்டும் நம்பர் ஒன் மகுடத்தை அலங்கரிக்க முடியும்.