11 வது ஐபிஎல் போட்டியின் 4 வது ஆட்டம் ராஜஸ்தான் ராயல்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கிடையே போட்டி இன்று ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற ஐதாராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் தங்கள் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். இதன்படி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.
ஆரம்பம் முதலே நிதானமான ஆட்டத்தினை வெளிபடுத்தி வந்த ராஜஸ்தான் அணி, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியினரின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறி வந்தது. அந்த அணியின் சன்ஜு சாம்சனை (49 ரன்கள்) தவிர அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இந்நிலையில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 9 விக்கெட் இழப்பிற்கு வெறும் 125 ரன்களே எடுத்தது.
பின்னர் 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய ஹைதராபாத் அணியின், தொடக்க வீரர் சகா 5 ரன்களில் வெளியேற தவான் மற்றும் அணியின் கேப்டன் வில்லியம்சன் இணைந்தனர். இருவரும் ராஜஸ்தான் அணியினரின் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர். இதனால் அந்த அணி 15.5 ஓவர்களிலேயே 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி இலக்கை எட்டியது. சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் அதிக பட்சமாக தவான் 77 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்நிலையில் நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எதிர்கொள்கிறது.