இந்த சின்னபையனும் கபில் தேவும் ஒன்னா..? கவாஸ்கர் காட்டம்
இந்திய கிரிக்கெட் அணியில் ஆல்ரவுண்டராக திகழ் பவர் ஹர்த்திக் பாண்ட்யா.
அவரது ஆட்டத்தை வைத்து முன்னாள் வீரர்கள் சிலர் கபில்தேவுடன் ஒப்பிட்டு கருத்து தெரிவித்தனர். இதை முன்னாள் கேப்டனும், டெலிவிசன் வர்ணனையாளருமான கவாஸ்கர் நிராகரித்துள்ளார்.
இதுகுறித்து தனியார் டெலிவிசனுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-
கபில்தேவை யாருடனும் ஒப்பிட முடியாது. அவர் ஒருதலைமுறை வீரர் இல்லை. ஒரு நூற்றாண்டின் கிரிக்கெட் வீரர். டான் பிராட்மேன், தெண்டுல்கரை போன்றவர் ஆவார். இதனால் நாம் கபில்தேவுடன் யாரையும் ஒப்பிடக்கூடாது.
டெஸ்ட் போட்டியில் தவானின் ஆட்டம் மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. அவர் தனது விளையாட்டு முறையை மாற்ற விரும்பவில்லை. வெளிநாடுகளில் அவர் டெஸ்டில் ரன்களை எடுக்க தடுமாடுகிறார்.
லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் 2-வது டெஸ்டில் இந்திய அணி கூடுதலாக ஒரு பேட்ஸ் மேனுடன் ஆடவேண்டும். புஜாராவுக்கு வாய்ப்பு கொடுக்கலாம். உமேஷ் யாதவ் இடத்தில் சேர்க்கலாம். ஹர்த்திக் பாண்ட்யா நீடிக்கலாம். ஆடுகளத்தின் தன்மை குறித்து இந்த முடிவை மேற்கொள்ளலாம்.
லார்ட்ஸ் டெஸ்டில் வெற்றி பெற இந்தியா ‘டாஸ்’ வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்ய வேண்டும். ஏனென்றால் கடந்த ஆண்டு தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஜோகன்ஸ்பர்க் டெஸ்டில் 200 ரன்னுக்குள் சுருண்டது போல் நடந்து விடக்கூடாது.
பெரும்பாலான அணிகள் 4-வது இன்னிங்சில் 200 ரன் இலக்கை எடுக்க தடுமாறுகின்றன. முதல் டெஸ்டில் சேஸ் செய்து இருந்ததால் இங்கிலாந்து அணியும் திணறி இருக்கும்” என்றார்.