ஒரே ஓவரில் 5 விக்கெட்… எதிரணியை நடுங்க வைத்து வரலாற்று சாதனை படைத்த இந்திய பந்துவீச்சாளர்.. !

ஒரே ஓவரில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி புதிய வரலாற்று சாதனையை டி20 கிரிக்கெட் போட்டிகளில் படைத்திருக்கிறார் கர்நாடகாவை சேர்ந்த இந்திய பந்துவீச்சாளர் அபிமன்யூ மிதுன்.

சூரத்தில் நடைபெற்ற சையத் முஸ்தாக் அலி டி20 போட்டியின் அரையிறுதியில் ஹரியானா மற்றும் கர்நாடகா இரு அணிகளும் பலப்பரீட்சை மேற்கொண்டன. இதில் வெல்லும் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என்ற நிலையில், முதலில் பேட்டிங் செய்தது ஹரியானா அணி.

ஹரியானா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் எடுத்தது. ஹரியானா அணிக்கு அதிகபட்சமாக பிஷோனி 55 ரன்களும், ஹிமன்ஷு ராணா 61 ரன்களும் எடுத்தனர்.

பந்துவீச்சில் அசத்திய கர்நாடகா அணிக்கு, கடைசி ஓவரை வீசிய அபிமன்யூ மிதுன் முதல் 4 பந்துகளில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி ஹாட்ரிக் விக்கெட்டை கைப்பற்றினார். பின்னர், கடைசிப் பந்தில் மற்றொரு விக்கெட்டையும் வீழ்த்தி ஒரே ஓவரில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி டி20 போட்டிகளில் புதிய சாதனை செய்துள்ளார்.

டி20 வரலாற்றில் எந்த ஒரு பந்துவீச்சாளரும் இதுவரை 6 பந்துகளில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதில்லை. இந்நிலையில், இந்த சாதனையை படைத்த ஒரே வீரர் என்ற பெருமையை பெற்றார். அபிமன்யூ மிதுன் இந்த ஆட்டத்தில் 4 ஓவர்கள் வீசி 39 ரன்கள் விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

195 ரன்கள் என்ற இலக்கை துரத்திய கர்நாடக அணி, அதிரடியாக ஆடி 15 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கேஎல் ராகுல் 31 பந்துகளில் 6 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 66 ரன்கள் விளாசினார். தேவ்தத் படிக்கல் 42 பந்துகளில் 4 சிக்ஸர், 11 பவுண்டரிகளுடன் 87 ரன்கள் எடுத்து வெற்றியை எளிதாக்கினார்.

இந்த வெற்றியின் மூலம் சையத் முஸ்தாக் அலி டி20 டிராபியில் கர்நாடகா அணி இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

Prabhu Soundar:

This website uses cookies.