காயம் காரணமாக விலகும் கேதர் ஜாதவ்…? அதிர்ச்சியில் சென்னை ரசிகர்கள்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரரான கேதர் ஜாதவ் காயம் காரணமாக ஐ.பி.எல் தொடரில் இருந்து விலக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது கடைசி லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை எதிர்கொண்டது. மொஹாலியில் நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 170 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக, டூ பிளெசிஸ் 96 ரன்களும், சுரேஷ் ரெய்னா 53 ரன்களும் எடுத்தனர்.
அடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணி, கே.எல்.ராகுலின் (71) அதிரடியால் 18 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை எட்டியது. சென்னை அணி, ஏற்கனவே ப்ளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்துவிட்டதால், இந்தத் தோல்வியால் எந்தவித பாதிப்பும் இல்லை.
இந்தப் போட்டியில் ஆல் ரவுண்டர் கேதர் ஜாதவுக்கு காயம் ஏற்பட்டதால், எஞ்சியுள்ள போட்டிகளில் அவர் விளையாடுவது சந்தேகம் என தெரியவந்துள்ளது.
போட்டி முடிந்த பிறகு பயிற்சியாளர் பிளெமிங் பேசுகையில், “கேதர் ஜாதவுக்கு நாளை ஸ்கேன் எடுக்கப் போகிறார்கள். மீண்டும் அவர் தொடரில் விளையாடுவாரா என தெரியவில்லை. அவர் அசவுகரியமாக இருக்கிறார் என்று கூறினார்.
மேலும், உலகக்கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியிலும் கேதர் ஜாதவ் இடம்பெற்றிருந்தார். ஒரு வேளை அவர் விரைவில் குணம் அடைந்தாலும், உலகக்கோப்பை தொடரை கருத்தில் கொண்டு ஐ.பி.எல் போட்டியில் இருந்து ஓய்வு அளிக்கப்படும் என தெரிகிறது.
கடந்த தொடர்களை போலவே இந்த தொடரிலும் வழக்கம் போல் ப்ளே ஆஃப் சுற்றிற்கு தகுதி பெற்றுள்ள தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நாளை நடைபெறும் அரையிறுதி போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ள நிலையில், கேதர் ஜாதவ் காயம் காரணமாக விலக உள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.