உலகின் நம்பர் 1 பவுலரான இந்தியாவின் ஜஸ்பிரித் பும்ரா நேற்று தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக தீப்பொறி பறக்க வீசினார், அவரது ஸ்விங், எழுச்சி ஆகியவற்றை குவிண்டன் டி காக் போன்ற அதிரடி வீரரே சமாளிக்க முடியவில்லை.
ஒரு கட்டத்தில் குவிண்டன் டி காக் தொடர்ச்சியாக பீட்டன் ஆகும்போது அவரே சிரித்து விட்டார், அது பும்ராவை பாராட்டும் முகமாக அமைந்தது. ஆம்லா ஒரு பந்தைத்தான் தொட்டார் தொட்டவுடன் கெட்டார். காற்றில் உள்ளே கொண்டு வந்து பிறகு லேசாக வெளியே எடுத்தார் பும்ரா, எட்ஜ் ஆவதைத் தவிர ஆம்லாவுக்கு வேறு வழியில்லை.
டிக்காக்கிற்கும் வரிசையாக கடினமான பந்துகளை வீசி விட்டு கடைசியில் ஒரு வைடு லெந்த் பந்தை வீச வாரிக்கொண்டு அடிக்கப் போய் எட்ஜ் ஆகி 3வது ஸ்லிப்பில் கோலியிடம் கேட்ச் ஆகி வெளியேறினார், இந்தச் சரிவிலிருந்து மீளாத தென் ஆப்பிரிக்கா இந்தியாவிடமும் தோல்வி கண்டு தொடர் 3 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது.
இந்நிலையில் முன்னாள் இங்கிலாந்து கேப்டனும், தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவருமான கெவின் பீட்டர்சன் தன் டிவிட்ட பக்கத்தில் வலது கை பேட்ஸ்மென்களுக்கு மட்டும் என்று பும்ராவை எதிர்கொள்வது எப்படி என்று ட்வீட் செய்துள்ளார்.
இதில் அவர், “அனைத்து வலது கை பேட்ஸ்மென்களுக்கும் ஒரு விரைவு மெமோ – பும்ரா வீசும் போது ஆஃப் ஸ்டம்புக்கு நகருங்கள், பின்னால் சென்று ஸ்கொயர் லெக்கில் ஆடுங்கள்.. ஆஃப் சைடில் விளையாடுவதை முற்றிலும் கைவிட்டு விடுங்கள்” என்று அறிவுரை வழங்கியுள்ளார்.
பும்ராவின் 2 விக்கெட், சாஹலின் 4 விக்கெட்டுகள் நேற்று தென் ஆப்பிரிக்காவை புதைத்தது. ஆனால் 89/5 என்று இருந்த போது 153/7 என்று இருந்த போது பும்ராவைக் கொண்டு வந்து கதையை முடிக்கும் திறன் கோலியிடம் இல்லை. தேவையில்லாமல் அரைக்கை பவுலர் ஜாதவ்விடம் கொடுத்தார். இல்லையெனில் தென் ஆப்பிரிக்கா 227 ரன்கள் அடித்திருக்க வாய்ப்பில்லை.