ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடுபவர்கள் டேவிட் வார்னரும், விஜய் சங்கரும். வார்னர்தான் ஐதராபாத் அணியின் கேப்டனும் ஆவார். கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதிலிருந்து ஆன்லைனில் பிஸியாகவே இருந்து வருகிறார் வார்னர்.
குறிப்பாக டிக் டாக் வீடியோக்களைத் தொடர்ந்து பகிர்ந்து வருகிறார் வார்னர். இந்நிலையில் அவர், ‘வார்னர் கார்னர்’ என்னும் நிகழ்ச்சி மூலம் தன் சக அணி வீரரான விஜய் சங்கருடன் வீடியோ வழியாக உரையாடினார். அதில் இருவரும் பல்வேறு விஷயங்கள் குறித்துப் பகிர்ந்து கொண்டனர்.
ஒரு கட்டத்தில் அணியில் எப்போதும் பேருந்துக்கு தாமதமாக வருவது யார் என்கிற கேள்வி எழுந்தது. அதற்கு வார்னர், “எனக்குத் தெரிந்து அது கலீல் அகமதாகத்தான் இருக்கும். காலை 9 மணிக்கு அனைவரும் பேருந்தில் இருக்க வேண்டும் என்று சொல்லப்பட்டால், 9:15 மணிக்கு வந்து ‘குட் மார்னிங்’ என்பார்” என்று கிண்டலாக பேசினார்.
அதே நேரத்தில் விஜய் சங்கர், “2016 ஆம் ஆண்டு வாக்கில், தீபக் ஹூடா மற்றும் பரீந்தர் ஸ்ரான் ஆகியோர் எப்போதும் லேட்டாகவே வருவார்கள்,” என்றார். அதை ஆமோதிக்கும் வகையில் வார்னர் குலுங்கி குலுங்கிச் சிரித்தார்.
டேவிட் வார்னர், 2014 ஆம் ஆண்டு முதல் ஐதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார். இதுவரை 126 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள வார்னர், 43.17 சராசரியில் 4,706 ரன்கள் குவித்துள்ளார். 4 ஐபிஎல் சதங்களையும் அடித்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக முதன் முதலில் களமிறங்கினார் சங்கர். ஆனால் சிஎஸ்கேவுக்காக ஒரேயொரு போட்டியில் மட்டுமே அவர் விளையாடினார்.
2016 ஆம் ஆண்டு சங்கரை, ஐதராபாத் அணி வாங்கியது. இதுவரை 33 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள சங்கர், 557 ரன்கள் குவித்துள்ளார். 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.