ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு போட்டியின் போதும், தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான நெஸ் வாடியா, இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் இரு அணிகளுக்கு இடையிலான போட்டியின்போது அந்தந்த நாட்டின் தேசிய கீதம் இசைக்கப்படுவது வழக்கம். இதே போல, ஐபிஎல் தொடரிலும் போட்டி தொடங்குவதற்கு முன் தேசிய கீதம் இசைக்கும் முறையை கொண்டு வரவேண்டும் என்று நெஸ் வாடியா தெரிவித்துள்ளார்.
(பிரீத்தி ஜிந்தாவுடன் நெஸ் வாடியா)
இதுகுறித்து இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், ‘செலவைக் குறைப்பதற்காக ஐபிஎல் தொடக்க விழாவை நிறுத்தியது சரியான நடவடிக்கை. ஐபிஎல்-லில் ஒவ்வொரு போட்டிக்கு முன்பும் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும். சினிமா தியேட்டர்களில் தேசிய கீதம் இசைக்கப்படுகிறது. அதேபோல் கால்பந்து லீக்-கிலும், புரோ கபடியிலும் தேசிய கீதம் இசைக்கப்படுகிறது. இதுபற்றி ஏற்கனவே கடிதம் எழுதி இருக்கிறேன். இப்போது சவுரவ் கங்குலி தலைவராக உள்ளதால் அவருக்கும் கடிதம் எழுதியுள்ளேன்’’ என தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 2020ற்கான வீரர்கள் ஏலம் கொல்கத்தாவில் டிசம்பர் மாதம் 19ம் தேதி நடைபெறும் என்று ஐபிஎல் நிர்வாக கவுன்சில் அறிவித்துள்ளது.
பொதுவாக ஏப்ரல்-மே மாத விடுமுறைக் காலங்களில் பணமழை ரன் மழை ஐபிஎல் போட்டிகள் நடைபெறும், இம்முறை கொல்கத்தாவில் முதல் முறையாக இதற்கான வீரர்கள் ஏலம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுநாள் வரை பெங்களூருவில் நடைபெற்று வந்தது, பிசிசிஐ புதிய தலைவர் கங்குலி என்பதால் கொல்கத்தாவுக்கு மாற்றப்பட்டுள்ளது.
ஐபிஎல் 2020க்காக ஒவ்வொரு அணிக்கும் ரூ.85 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த ஏலத்தில் மீதமுள்ள தொகையுடன் கூடுதலாக ரூ.3 கோடி ஒவ்வொரு அணி உரிமையாளர்களின் இருப்பில் இருக்கும்.
டெல்லி கேப்பிடல்ஸ் அணியிடம்தான் ரூ.8.2 கோடி என்று அதிகபட்ச தொகை கையிருப்பில் உள்ளது. அடுத்த இடத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் ரூ.7.15 கோடி வைத்துள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் ரூ.6.05 கோடி உள்ளது. மும்பை இன்தியன்ஸ் அணியிடம் 3.55 கோடி கையிருப்பு உள்ளது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் ரூ.3.2 கோடி உள்ளது. ஆர்சிபி அணியிடம் ரூ.1.80 கோடியும் சன்ரைசர்ஸ் ஹைதராபாதிடம் ரூ.5.30 கோடியும் கைவசம் உள்ளது.
இந்த ஆண்டு நடைபெறும் ஏலம்தான் ஏற்கெனவே இருக்கும் வீரர்களுக்கான கடைசி ஏலம், 2021 மெகா ஏலத்தில் அனைத்து அணிகளும் கலைக்கப்பட்டு புதிதாக ஏலத்தில் வீரர்களைத் தேர்வு செய்யும்.
எனவே 2021-ல் அனைத்து ஐபிஎல் அணிகளின் தோற்றமே மாறிவிடும் என்று தெரிகிறது.