டாஸ் வென்ற பஞ்சாப் பீல்டிங் தேர்வு செய்துள்ளது! அணியில் சில மாற்றங்கள்!

டாஸ் வென்ற பஞ்சாப் பீல்டிங் தேர்வு செய்துள்ளது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சுனில் நரைன், கிறிஸ் லின், ராபின் உத்தப்பா, நிதீஷ் ராணா, தினேஷ் கார்த்திக் (கேப்டன்), ஆண்ட்ரே ரஸல், ஷுப்மான் கில், டாம் குர்ரான், பியுஷ் சாவ்லா, ஷிம்மா மாவி, குல்தீப் யாதவ்

கிங்ஸ் XI பஞ்சாப் : லோகேஷ் ராகுல், கிறிஸ் கெய்ல், மாயன்க் அகர்வால், கருன் நாயர், ஆரோன் பிஞ்ச், யுவராஜ் சிங், ரவிச்சந்திரன் அஸ்வின் (கேப்டன்), கேட்ச் ஆண்ட்ரூ டை, பரேண்டர் ஸ்ரான், அங்கீட் ராஜ்பூட், முஜீப் உர் ரஹ்மான்,

ஐபிஎல் டி 20 தொடரில் இன்று மாலை 4 மணிக்கு கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் புள்ளிகள் பட்டியலில் முதலிடம் வகிக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, மாற்றங்களுடன் புதிய வடிவம் பெற்றுள்ள அஸ்வின் தலைமையிலான கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணியுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் பெரிய அளவிலான ஹிட்டர்களான ஆந்த்ரே ரஸ்ஸல், கிறிஸ் கெயில் ஆகியோர் இடையிலான நேரடி மோதலாக பார்க்கப்படுகிறது.

பஞ்சாப் அணியின் அதிரடி வீரரான கிறிஸ் கெயில் நேற்றுமுன்தினம் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 63 பந்துகளில் 104 ரன்கள் விளாசி இந்த சீசனில் சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார். இந்தத் தொடரில் சிறந்த பந்து வீச்சை கொண்ட அணியாக கருதப்படும் ஹைதராபாத்துக்கு எதிராக சதம் அடித்ததன் மூலம் அனைவரது கவனத்தையும் தன் மீது குவியச் செய்துள்ளார் கிறிஸ் கெயில். இந்த ஆட்டத்தில் அவர், 11 சிக்ஸர்கள் பறக்கவிட்டார். இதில் 6 சிக்ஸர்கள், உலகின் சிறந்த தரவரிசையில் உள்ள டி 20 சர்வதேச பந்து வீச்சாளர் ரஷீத் கானுக்கு எதிராக விளாசப்பட்டதாகும்.

கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற ஏலத்தில் தன்னை ஏலம் எடுக்காமல் ஊதாசீனப்படுத்திய பல்வேறு அணிகளுக்கு பொருத்தமான வகையில் தனது மட்டையின் விளாசலால் கிறிஸ் கெயில் பதிலடி கொடுத்ததாகவே கருதப்படுகிறது. 38 வயதான கிறிஸ் கெயில் கடந்த 10 சீசன்களில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகளுக்காக விளையாடிய நிலையில் இந்த சீசனுக்கான ஏலத்தில் அவரை யாரும் விலைக்கு வாங்க முன்வரவில்லை. அந்த சூழ்நிலையில்தான் பஞ்சாப் அணியின் ஆலோசகரான வீரேந்திர சேவக், கிறிஸ் கெயில் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பு வழங்கினார்.

முதல் இரு ஆட்டங்களிலும் கிறிஸ் கெயிலுக்கு வாய்ப்பு வழங்கப்படாத நிலையில் அடுத்த இரு ஆட்டங்களிலும் கிடைத்த பொன்னான வாய்ப்புகளை முழுமையாக தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக வெற்றி பெற்ற ஆட்டத்தில் கிறிஸ் கெயில் 63 ரன்கள் விளாசி வெற்றியில் முக்கிய பங்களிப்பு செய்திருந்தார். ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பிறகு கிறிஸ் கெயில் கூறும்போது, “ஏராளமான மக்கள் நான், எனது திறமையை நிரூபிக்க வேண்டிய நிலையில் இருப்பதாக கூறினார்கள். காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை. நான் யாருக்கும் எதையும் நிரூபிக்க இங்கு வரவில்லை. கிரிக்கெட்டை மகிழ்வுடன் விளையாடி நகர்ந்து கொண்டேயிருக்க வேண்டியதுதான்” என்றார்.

Editor:

This website uses cookies.