எல்லாம் கெய்ல் கிட்ட கத்துகிட்டது தான்; கே.எல் ராகுல் சொல்கிறார்
அதிரடி ஆட்டத்திற்கு தேவையான நுணுக்கங்கள் பலவற்றை கிறிஸ் கெய்லிடம் இருந்து தான் கற்று கொண்டதாக பஞ்சாப் அணியின் துவக்க வீரர் கே.எல் ராகுல் தெரிவித்துள்ளார்.
ஐ.பி.எல் டி.20 தொடரின் 11வது சீசன் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற பஞ்சாப் – டெல்லி இடையேயான போட்டியில் பஞ்சாப் அணி அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் பஞ்சாப் அணியின் வெற்றிக்கு அந்த அணியின் துவக்க வீரர் கே.எல் ராகுல், வெறும் 14 பந்துகளில் அரைசதம் கடந்து, ஐ.பி.எல் அரங்கில் மிக குறைந்த பந்துகளில் அரைசதம் கடந்த வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.
இந்நிலையில் தனது அதிரடி ஆட்டத்திற்கு விண்டீஸ் அணியின் கிறிஸ் கெய்லின் அறிவுரைகள் மிக முக்கிய காரணம் என்று கே.எல் ராகுல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கே.எல் அவராகுல் கூறியதாவது, “நான் இப்படித்தான் விளையாட வேண்டும் என்று திட்டமிட்டுவிட்டோ, தீர்மானித்துவிட்டோ களத்திற்கு வரவில்லை. என்னை நோக்கி வீசப்பட்ட பந்துகளை சரியான இடத்தை பார்த்து திருப்பி அனுப்பினேன் அவ்வளவு தான். இதற்காக நான் பெருமைபட்டுக்கொள்ளவில்லை, டி.20 போட்டிகளை பொறுத்தவரையில் இப்படி ஒரு துவக்கத்தை கொடுப்பது ஒவ்வொரு துவக்க வீரரின் கடமை, நானும் அதை தான் செய்தேன்”.
அதே போல் நான் பெங்களூர் அணிக்காக விளையாடிய போது என்னுடன் விளையாடிய கிறிஸ் கெய்ல் தற்போது என்னுடன் பஞ்சாப் அணியிலும் இடம்பெற்றிருப்பது எனக்கு கூடுதல் மகிழ்ச்சி. கடந்த இரண்டு வருடங்களாக நான் அவரிடம் நிறைய ஆலோசனைகளை கேட்டு பெற்றுள்ளேன், அவரும் எனக்கு நிறைய நுணுக்கங்களை கற்று கொடுத்துள்ளார். நாங்கள் இருவரும் பெங்களூர் அணியில் இருந்து நிறைய விசயங்களை கற்றுள்ளதால் தற்போது பெங்களூர் அணிக்கு எதிராக விளையாடுவது சற்று சங்கடமாக இருக்கும், ஆனால் போட்டிகளில் அதனை பார்க்க கூடாது, நாம் சார்ந்திருக்கும் அணிக்கு நமது பங்களிப்பை சரியாக செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.