ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐபிஎல்-இன் இன்றைய (திங்கள்கிழமை) போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் அஸ்வின் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர், ஜானி பேர்ஸ்டோவ் களமிறங்கினர். நடப்பு ஐபிஎல் சீசனில் வெற்றிக் கூட்டணியாக ஜொலித்து வரும் இந்த கூட்டணி, இந்த போட்டியில் சோபிக்கவில்லை. பேர்ஸ்டோவ் 1 ரன்னுக்கு ஆட்டமிழந்தார்.
அதன்பிறகு, வார்னரும் விஜய் சங்கரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். விஜய் சங்கர் 26 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அஸ்வின் பந்தில் ஆட்டமிழந்தார். இவரைத்தொடர்ந்து களமிறங்கி துரிதமாக விளையாட முயன்ற முகமது நபி 12 ரன்களுக்கு ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். நபி ஆட்டமிழக்கும் போது வார்னர் 39 பந்துகளை எதிர்கொண்டு 33 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். இதையடுத்து, வார்னர் அதிரடியாக ரன் குவிக்க தொடங்கினார். மணீஷ் பாண்டேவும் அவருக்கு ஒத்துழைத்து நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இதன்மூலம், டேவிட் வார்னர் தனது 49-ஆவது பந்தில் அரைசதத்தை எட்டினார். இந்த ஜோடி ஹைதராபாத் அணியின் ரன் ரேட்டை சற்று உயர்த்தியது. 4-ஆவது விக்கெட்டுக்கு வார்னர், பாண்டே ஜோடி 35 பந்துகளில் 55 ரன்கள் சேர்த்தது. பாண்டே கடைசி ஓவரின் முதல் பந்தில் 19 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன்பிறகு களமிறங்கிய தீபக் ஹூடா தான் எதிர்கொண்ட 3 பந்துகளில் 2 பவுண்டரி, 1 சிக்ஸர் அடித்து ஹைதராபாத் அணிக்கு அட்டகாசமான ஃபினிஷிங்கை தந்தார். இதன்மூலம், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்தது.
இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த வார்னர் 62 பந்துகளில் 70 ரன்கள் எடுத்தார். பஞ்சாப் அணி சார்பில் முஜீப், அஸ்வின் மற்றும் ஷமி ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். இதைத்தொடர்ந்து 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி களமிறங்கியது. அந்த அணி 19.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்குகு 151 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் கேஎல் ராகுல், மயங் அகர்வால் சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்தனர். மயங் அகர்வால் 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ராகுல் 71 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.