‘டீம்ல இருக்கவே மாட்டேன்னு நெனச்சேன், இப்போ இவ்ளோ பெரிய பொறுப்பு’ உண்மையில் நடந்தது என்ன? கேஎல் ராகுல் ஓபன் டாக்!!

டெஸ்ட் அணியில் எனக்கு இடமே கிடைக்காது என நினைத்திருந்த போது, வாழ்க்கையே மாறிவிட்டது என்று மனம் திறந்து பேசியிருக்கிறார் துணை கேப்டன் கே எல் ராகுல்.

இந்திய அணியின் லிமிடெட் ஓவர் போட்டிகளில் ஷிகர் தவான் ரோகித் சர்மா ஜோடி அபாரமாக விளையாடி வந்ததால், மற்றுமொரு துவக்க வீரர் கே எல் ராகுலை எந்த இடத்தில் களம் இறக்குவது என புரியாமல் இந்திய அணி நிர்வாகம் வெளியில் அமர்த்தி வந்தது. மிடில் ஆர்டரில் சில போட்டிகளில் களமிறங்கி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தவான் இல்லாத நேரத்தில் துவக்க வீரராக களமிறங்கிய ராகுல், தன்னை நிரூபித்துக் காட்டினார். ஆகையால் அவரை ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து வெளியே எடுக்க முடியாத அளவிற்கு சூழல் மாறியது.

டெஸ்ட் போட்டியிலும் உள்ளே வெளியே விளையாடி வந்த கேஎல் ராகுல், இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடரில் நன்றாக விளையாடினார். அதற்கு அடுத்ததாக வந்த ஆஸ்திரேலிய தொடரின்போது இடம்பெறவில்லை. இதனால் சற்று அதிர்ச்சியான கேஎல் ராகுல் இனி டெஸ்ட் போட்டிகளில் இடம் பெறுவது கடினம் என நினைத்துக் கொண்டிருந்தார். சமீபத்தில் நடந்த நியூசிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடரின் போது காயம் காரணமாக விலகியிருந்தார்.

ஆனால் தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரின் எதிர்பாராத வகையில் ராகுலுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. இத்தொடரில் இடம்பெற்றிருந்த ரோகித் சர்மா திடீரென காயம் காரணமாக டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகினார். ஆகையால், துணை கேப்டன் பதவி தற்போது கே எல் ராகுலுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் மயங்க் அகர்வால் மற்றும் கேஎல் ராகுல் இருவரும் பேசிக்கொண்ட வீடியோ பதிவை பிசிசிஐ தனது வலைதளத்தில் வெளியிட்டது. அதில்,

“கிட்டத்தட்ட 10 மாதங்களுக்கு முன்பு, நான் இனி டெஸ்ட் அணியில் இடம் பெறுவேன் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை. அந்த அளவிற்கு உறுதி செய்யப்படாமல் இருந்தேன். ஆனால் தற்போது துணை கேப்டன் பதவி கிடைத்திருக்கிறது. அணி நிர்வாகம் என் மீது எந்த அளவிற்கு நம்பிக்கை வைத்துள்ளது என்பதை இதிலிருந்து புரிந்து கொள்கிறேன். மிகவும் பெருமிதமாகவும் கூடுதல் பொறுப்புடனும் என்னை நான் உணர்கிறேன். சவாலாக எடுத்துக் கொண்டு இந்த தொடரில் என்னை நான் நிரூபித்துக் காட்டுவேன்.” என்றார்.

Mohamed:

This website uses cookies.