விராட் கோலி மற்றும் கே எல் ராகுல் இருவரில் யார் டி20 உலக கோப்பையின் போது ரோகித் சர்மாவுடன் துவக்க வீரராக களம் இறங்க வேண்டும் என்று ரவி சாஸ்திரி பதில் கொடுத்திருக்கிறார்.
டி20 உலக கோப்பை தொடர் நெருங்கி வருகிறது. ஆஸ்திரேலியாவில் நடைபெறும் இந்த தொடரானது வருகிற அக்டோபர் 16ஆம் தேதி துவங்கி நவம்பர் மாதம் இரண்டாம் வாரம் வரை நடத்தப்பட இருக்கிறது. செப்டம்பர் 12ஆம் தேதி உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட இந்திய வீரர்களின் பட்டியல் பிசிசிஐ தரப்பிலிருந்து அறிவிக்கப்பட்டது.
இந்திய அணி அறிவிக்கப்பட்ட நாள் முதல் இதைப் பற்றின பேச்சுக்கள் மட்டுமே அடிபட்டு வருகின்றன. இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் எதிர்பார்க்கப்பட்ட அனைத்து வீரர்களும் இடம்பெற்று விட்டனர். ஆனால் விமர்சனம் முழுவதும் பந்துவீச்சு மற்றும் பந்துவீச்சாளர்கள் குறித்தே இருந்தது. இதற்கிடையில் தினேஷ் கார்த்திக் மற்றும் ரிஷப் பண்ட் இருவரில் யார் பிளேயிங் லெவனில் இருக்க வேண்டும் என்கிற பேச்சுக்களும் விவாதங்களும் நடைபெற்றன.
தற்போது ரோகித் சர்மாவுடன் யார் துவக்க வீரராக களமிறங்க வேண்டும் என்று பேச்சுக்கள் மற்றும் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. கே எல் ராகுல் அல்லது விராத் கோலி இருவரில் யார் துவக்க வீரராக இறங்கினால் சரியாக இருக்கும்? என்ற விவாதத்திற்கு இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பேட்டியில் பதிலளித்துள்ளார்.
“இந்த விவாதமே வீணற்றது. எனக்கு ரோஹித் மற்றும் ராகுல் இருவரும் தான் துவக்க வீரர்களாக களமிறங்க வேண்டும். அணியில் ஏதேனும் அவசரம் அல்லது கே எல் ராகுலுக்கு காயம் என்றால் விராட் கோலி துவக்க வீரராக களம் இறங்கலாம். மற்றபடி பேட்டிங் வரிசையில் எந்தவித மாற்றமும் தேவையில்லை. இந்திய அணிக்கு பேட்டிங் டெப்த் சிறப்பாக இருக்கிறது. ஆஸ்திரேலிய மைதானத்திற்கு ஏற்றவாறு சுழல்பந்துவீச்சாளர் மற்றும் வேகப்பந்து வீச்சாளர்கள் வரிசையில் மாற்றம் செய்து கொள்ளலாம்.
ஆஸ்திரேலியா மைதானம் வேகப்பந்துவீச்சிற்கு சாதகமாக இருப்பதால், மிடில் ஓவர்களிலும் அவர்கள் விக்கெட் எடுப்பார்கள். அந்த நேரத்தில் ரோகித் சர்மாவுடன் விராட் கோலி களமிறங்கி ஆட்டமிழந்துவிட்டால், மிடில் ஆர்டரில் அனுபவமிக்க வீரர்கள் இருக்க மாட்டர். விராட் கோலி அதற்காகவே சற்று கீழே களமிறங்க வேண்டும். மிடில் ஆர்டரில் அவர் தனது அனுபவத்தின் மூலம் அபாரமாக ரன் குவிப்பார்.
எதற்காக இப்படி ஒரு கற்பனை அனைவருக்கும் தோன்றியது? என்றே தெரியவில்லை. கேஎல் ராகுல் மிகச் சிறப்பாக ஆட்டத்தை துவங்கி வருகிறார். ஒரு சில போட்டிகள் தவறும் பொழுது விமர்சனங்கள் வருவது இயல்பு. அதற்காக ஒட்டுமொத்த திட்டத்தையும் முற்றிலுமாக மாற்றிடுவது எந்த ஒரு அணிக்கும் ஆபத்தாக முடியும்.” என்றார்.