ஒருநாள் தொடரின் மூன்றாவது போட்டியில் வெற்றி பெற்றது எப்படி ! வெற்றிக்கான சூத்திரத்தை உடைத்த கே எல் ராகுல் !
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான ஒருநாள் மற்றும் டி20 தொடர் நடைபெற்று முடிந்துவிட்டது. இதில் ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலிய அணியும் டி20 தொடரில் இந்திய அணியும் வெற்றி பெற்று மொத்தமாக சேர்த்து 6 போட்டிகளில் இரு அணிகளும் தலா 3 போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கின்றன.
குறிப்பாக இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 66 ரன்கள் வித்தியாசத்திலும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் 51 ரன்கள் வித்தியாசத்திலும் தோல்வியடைந்தது. அதன் பின்னர் பல்வேறு விமர்சனங்கள் வந்து கொண்டிருந்தது.
இதனை தொடர்ந்து திடீரென மூன்றாவது ஒருநாள் போட்டியில் அபாரமாக வெற்றி பெற்றது இந்திய அணி. இத்தனைக்கும் முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் இரண்டாவது பேட்டிங் பிடித்திருந்தது இந்திய அணி 3-வது போட்டியில் முதல் பேட்டிங் பிடித்து அற்புதமாக ஆடி வெற்றி பெற்றது.
இந்நிலையில் 3வது போட்டியில் இந்திய அணியின் திட்டம் என்னவாக இருந்தது என்பது குறித்து பேசியிருக்கிறார் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கேஎல் ராகுல்.
அவர் கூறுகையில் “ஆஸ்திரேலியா போன்ற ஒரு மாபெரும் அணிக்கு எதிராக முதல் இரண்டு போட்டிகளில் தோற்று விட்டு மூன்றாவது போட்டியில் வெற்றி பெறுவது அவ்வளவு எளிதல்ல. முதல் இரண்டு போட்டிகளில் தோற்ற பின்னர் இனி அடுத்து வரும் நான்கு போட்டிகளிலும் ஒரு புதிய தொடரை போன்று நினைத்துக் கொண்டு விளையாட வேண்டும்.
அப்போதுதான் நம்மால் மீண்டு வர இயலும். ஒருநாள் மற்றும் டி20 தொடர் எங்களுக்கு மிகப்பெரிய பாடமாக அமைந்தது. ஒவ்வொரு போட்டியும் கடுமையான போட்டியாகத்தான் இருந்தது. எங்களது அணியில் இருக்கும் ஒவ்வொருவரும் மற்றவர்கள் ஒவ்வொருவரையும் நம்புகிறோம். இதன் காரணமாகத்தான் நாங்கள் தொடர்ந்து வெற்றி பெற முடிந்தது” என்று தெரிவித்திருக்கிறார் கே எல் ராகுல்.