சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று வெளியிட்ட டி20 போட்டிகளுக்கான பேட்ஸ்மேன்கள் தரவரிசைப் பட்டியலில் டாப் 10 வரிசையில் மூன்று இந்திய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
டாப் 10 வரிசையில் நீண்டகாலமாக இடம் பெறாமல் இருந்துவந்த விராட் கோலி இடம் பெற்றுள்ளார். மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான டி20 தொடரில் மும்பையில் நடந்த ஆட்டத்தில் 29 பந்துகளுக்கு 70 ரன்கள், ஹைதராபாத்தில் நடந்த ஆட்டதிதல் 94 ரன்கள் சேர்த்து தொடர் நாயகன் விருதைப் பெற்றார். டி20 தொடரில் சிறப்பாகச் செயல்பட்ட காரணத்தால், பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப் பட்டியலில் 5 இடங்கள் முன்னேறி 685 புள்ளிகளுடன், 10-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய 3 பிரிவுகளிலும் பேட்டிங் சராசரியை 50 ரன்களுக்கு வைத்துள்ள ஒரே பேட்ஸமேன் கோலி மட்டுமே. 84 டெஸ்ட் போட்டிகளில் கோலி 7,202 ரன்கள் சேர்த்து 54.97 சராசரி வைத்துள்ளார். 239 ஒருநாள் போட்டிகளில் 11,520 ரன்கள் சேர்த்து 60.30 சராசரியாகக் கோலி வைத்துள்ளார். 75 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள கோலி 2,633 ரன்களுடன் 52.66 சராசரி வைத்துள்ளார். இந்த ஆண்டு முடிய இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் தொடர்ந்து 4 காலண்டர் ஆண்டில் அதிகமான ரன்கள் சேர்த்த பேட்ஸ்மேன் எனும் பெருமையை கோலி பெற உள்ளார்.
டி20 தொடரில் மும்பையில் நடந்த ஆட்டத்தில் அதிரடியாகப் பேட் செய்து 91 ரன்கள் சேர்த்த கே.எல்.ராகுல் தரவரிசையில் 3 இடங்கள் முன்னேறி 734 புள்ளிகளுடன் 6-வது இடத்துக்கு உயர்ந்துள்ளார்.
Photo by Vipin Pawar / Sportzpics for BCCI
அதேசமயம் ரோஹித் சர்மா ஒரு இடம் பின்தங்கி 686 புள்ளிகளுடன் 9-வது இடத்துக்கு சரிந்துள்ளார்.
முதலிடத்தில் பாகிஸ்தான் வீரர் பாபர் ஆசம் 879 புள்ளிகளுடன் உள்ளார்.2 முதல் 5 இடங்களில் முறையே, ஆஸி.வீரர் ஆரோன் பிஞ்ச், இங்கிலாந்து வீரர் டேவிட் மலான், நியூஸிலாந்து வீரர் கோலின் மன்ரோ, ஆஸி. வீரர் மேக்ஸ்வெல் ஆகியோர் உள்ளனர்.
7-வது இடத்துக்கு மே.இ.தீவுகள் வீரர் இவான் லூயிஸும், 8-வது இடத்தில் ஆப்கானிஸ்தான் வீரர் ஹஸ்ரத்துல்லாவும் சரிந்துள்ளனர்