ஐபிஎல் தொடரில் விராத் கோலியைவிட கேஎல் ராகுல் சிறப்பாக விளையாடுவார்கள் என கணித்துள்ளார் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா.
செப்டம்பர் 19-ஆம் தேதி தொடங்கி நவம்பர் 10ஆம் தேதி வரை சுமார் 53 நாட்கள் ஐபிஎல் தொடர் நடைபெறவிருக்கிறது. இதற்காக வீரர்கள் அனைவரும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த வருடம் இந்தியாவில் நடத்த அனுமதி கிடைக்காததால், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்பட இருக்கிறது. அதற்காக வீரர்கள் அனைவரும் ஏற்கனவே ரூபாய் மற்றும் அபுதாபி சென்று தங்ளது பயிற்சியை தொடங்கி விட்டனர். பயிற்சிக்கு முன்னதாக கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் நெகட்டிவ் வந்த பிறகு வீரர்கள் பயிற்சிக்கு அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
ஐபிஎல் தொடரை பொறுத்தவரை வெற்றிகரமான அணிகளாக சென்னை, மும்பை ஆகிய அணிகள் இருக்கின்றன அதற்கு அடுத்ததாக கொல்கத்தா அணி இரண்டு முறை கோப்பையை வென்றிருக்கிறது. ஆனால் பலம் கொண்ட அணியாக ஒவ்வொரு முறையும் பார்க்கப்படும் பெங்களூரு அணி இதுவரை ஒரு முறை கூட கோப்பையை வென்றதில்லை. அந்த அணியில் விராட் கோலி, டிவில்லியர்ஸ் கிறிஸ் கெய்ல் ஆகியோர் இருந்தபோதும் கோப்பையை வெல்ல முடியாமல் திணறியது.
இந்நிலையில் இந்த வருடமும் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப பேலன்ஸ் அணியை பெங்களூரு கொண்டிருக்கிறது. விராத் கோலி ரசிகர்களுக்கு நம்பிக்கை தரும் விதமாக பேசியிருக்கிறார். அணியில் யார் சரியாக செயல்படவில்லை என்றாலும், விராட் கோலி எப்போதும் அபாரமாக விளையாடி வருகிறார்.
அதேபோல், பஞ்சாப் அணி இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வென்றது இல்லை. இந்தமுறை பஞ்சாப் அணியும் பலம்மிக்க அணியாக கவனிக்கப்படுகிறது. அந்த அணிக்கு கடந்த 2 சீசன்களாக பேட்டிங்கில் கேஎல் ராகுல் நம்பிக்கை தரும் விதமாக சுமார் 600 ரன்களுக்கு மேல் அடித்து வருகிறார். இம்முறை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
இந்த வருட ஐபிஎல் தொடரில் விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் இருவருக்கும் இடையே யார் அதிக ரன்கள் அடிப்பர் என்கிற கடும் போட்டி நிலவும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கணித்திருக்கிறார். மேலும் அவர் கூறுகையில், விராட் கோலி ரன் குவிப்பில் வல்லவர் என அனைவரும் அறிவர். பெங்களூர் அணிக்காக இதை பலமுறை செய்திருக்கிறார்.
ஆனால் விராட் கோலியை மிஞ்சும் அளவிற்கு தற்போது கேஎல் ராகுல் செயல்பட்டு வருவது ஆச்சரியம் அளித்தாலும், இந்த வருட ஐபிஎல் தொடரிலும் நிச்சயம் கேஎல் ராகுல் விராட் கோலியை விட அதிக ரன் அடிப்பார். மேலும் கூடுதலாக கேப்டன் பொறுப்பு கொடுக்கப்பட்டு இருப்பதால் இன்னும் கவனத்துடன் விளையாடுவார் என நினைக்கிறேன்.” என்று குறிப்பிட்டார்.