விராட் கோலி மற்றும் சுப்மன் கில் இருவரும் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறிய நிலையில், ரோகித் சர்மா அரைசதம் கடந்து அணியை சரிவில் இருந்து மீட்டு வருகிறார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து இந்திய அணிக்கு தொடக்க வீரர்களாக சுப்மன் கில் மற்றும் ரோஹித் சர்மா இருவரும் களமிறங்கினார். இதழ் சுப்மன் கீழ் ரன் எதுவும் எடுக்காமல் ஸ்டோன் பந்தில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார்.
அடுத்து வந்த புஜாரா விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட போது 58 பந்துகள் மட்டுமே பிடித்து 21 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்க இந்திய அணி தடுமாற்றம் கண்டது. அதில் இருந்து மீள்வதற்குள் அடுத்த வந்த விராட் கோலியும் 5 பந்துகளை பிடித்து ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார்.
86 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இந்திய அணி இழந்திருந்த போது மறுமுனையில் ஆடி வந்த ரோகித் சர்மா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 49 பந்துகளில் அரைசதம் கடந்தார். இவருடன் ஜோடி சேர்ந்த ரஹானே விக்கெட் விடாமல் நங்கூரம் போல் நிலைத்து ஆடி வருகிறார். உணவு இடைவேளைக்குப் பிறகு நிதானமாக விளையாடி வரும் இந்திய அணி 130 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது. களத்தில் ரோகித் சர்மா 90 ரன்களுடனும் ரஹானே 20 ரன்களுடனும் இருந்தனர்.
இங்கிலாந்து அணி சார்பாக ஸ்டோன், மொயின் அலி மற்றும் லீச் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளை எடுத்திருக்கிறார்கள்.
முதல் போட்டியில் சற்று தடுமாற்றத்துடன் விளையாடி வந்த ரோகித் சர்மா இந்த போட்டியில் சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இந்திய அணி 0-1 என தொடரில் பின்தங்கி இருக்கிறது. இந்த போட்டியில் நிச்சயம் வென்றாக வேண்டும் என முனைப்பில் இருக்கிறது.