இங்கிலாந்துக்கு எதிரான 4-1 உதையில் பேட்ஸ்மெனாகத் தேறியவர் விராட் கோலி மட்டுமே அவர் 593 ரன்களை 59.3 என்ற சராசரியில் எடுத்து அசத்தினார், இதனையடுத்து ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரநிலையில் முதலிடத்தைத் தக்க வைத்தார்.
ரிஷப் பந்த், ராகுல் கடைசி டெஸ்ட், கடைசி இன்னிங்சில் கலக்கியதை அடுத்து தரவரிசையில் பெரிய முன்னேற்றம் கண்டனர்.
கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்த அலிஸ்டர் குக் 10ம் இடத்தில் தன் கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துள்ளார்.
ராகுல் 19வது இடத்திற்கும் ரிஷப் பந்த் 111வது இடத்துக்கும் முன்னேறியுள்ளனர். பேட்டிங் தரவரிசையில் ஓவலில் 86 நாட் அவுட் என்று கலக்கிய ஜடேஜா 58வது இடத்தில் உள்ளார். ஆல்ரவுண்டர் தரவரிசையில் 2ம் இடத்தில் உள்ளார் ஜடேஜா.
டெஸ்ட் பவுலிங் தரவரிசையில் தொடரை நம்பர் 1 ஆகத் தொடங்கிய ஜேம்ஸ் ஆண்டர்சன் நம்பர் 1ஆகவே முடித்துள்ளார். 900 தரவரிசைப் புள்ளிகளுக்கு இன்னும் ஒரு புள்ளி மீதமுள்ளது.
பென் ஸ்டோக்ஸ் 27ம் இடத்துக்கும் ஆதில் ரஷீத் 44ம் இடத்துக்கும் சாம் கரன் 51ம் இடத்துக்கும் முன்னேறியுள்ளனர்.
முதலிடப் புள்ளிகளை இழந்த இந்திய அணி:
இங்கிலாந்து தொடரை நம்பர் 1 ஆகத் தொடங்கிய இந்திய அணி 4-1 உதையிலும் நம்பர் 1 நிலையை இழக்கவில்லை. (நன்றி: ஐசிசி தரவரிசை கணக்கீட்டு முறை). ஆனால் 125 புள்ளிகளிலிருந்து 115 புள்ளிகளாகக் குறைந்துள்ளது.
மாறாக இங்கிலாந்து அணி 4-1 வெற்றியினால் 97 புள்ளிகளிலிருந்து 105 புள்ளிகளுக்கு உயர்ந்து நியூஸிலாந்தைப் பின்னுக்குத் தள்ளியது. தற்போது தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியாவைக் காட்டிலும் ஒரு புள்ளிதான் குறைவாக பெற்றுள்ளது இங்கிலாந்து.
தரவரிசையில் 4 அணிகள் 5 புள்ளிகள் இடைவெளியில் உள்ளன.