இந்திய அணி தோற்றாலும்.. தனது சாதனையை சைலண்டாக செஞ்சு முடித்த விராத் கோஹ்லி! முழு பட்டியல் இதோ..
சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் பிரையன் லாராவை பின்னுக்குத் தள்ளி 7வது இடத்தை பிடித்துள்ளார் விராத் கோஹ்லி.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதன் மூலம் இந்தத் தொடரில் இங்கிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இந்திய அணி தோல்வியுற்றபோதும் விராட் கோலி தனது பங்களிப்பை கொடுத்து, முதல் இன்னிங்சில் 11 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தாலும் இரண்டாவது இன்னிங்சில் இறுதிவரை போராடி 72 ரன்கள் அடித்திருந்தார்.
இந்த போட்டியில் 83 ரன்கள் எடுத்திருந்த விராட்கோலி சர்வதேச அரங்கில் 22 ஆயிரத்து 369 ரன்கள் அடித்துள்ளார். இதன்மூலம் பிரையன் லாரா அடித்திருந்த 22 ஆயிரத்து 351 ரன்கள் என்ற மைல்கல்லை கடந்து சர்வதேச அரங்கில் அதிக ரன் குவித்த வீரர்கள் பட்டியலில் 7வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறார். இந்த சாதனையை விராத் கோஹ்லி 424 போட்டிகளில் 470 இன்னிங்ஸ் விளையாடி நிகழ்த்தியிருக்கிறார். பிரையன் லாரா 430 போட்டிகளில் 521 இன்னிங்சில் இந்த மைல்கல்லை எட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.
விராட் கோலி இதுவரை 70 சதங்களும் 109 அரை சதங்களும் அடித்துள்ளார். அதிக சதங்கள் அடித்தவர் பட்டியலில் சச்சினுக்கு அடுத்தபடியாக விராட் கோஹ்லி இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.
சச்சின் டெண்டுல்கர் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் 34 ஆயிரத்து 357 ரன்கள் அடித்து முதலிடத்தில் இருக்கிறார். இதில் 100 சதங்கள் மற்றும் 164 அரை சதங்கள் அடங்கும்.
சர்வதேச அரங்கில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியல்:
- சச்சின் – 34,357 ரன்கள்
- சங்கக்காரா – 28,016 ரன்கள்
- பாண்டிங் – 27,483 ரன்கள்
- ஜெயவர்தனே – 25,957 ரன்கள்
- காலிஸ் – 25,534 ரன்கள்
- டிராவிட் – 24,208 ரன்கள்
- கோலி – 22,369 ரன்கள்
- லாரா – 22,358 ரன்கள்
நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து அணி முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி வருகிற பிப்ரவரி 13ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் துவங்கவுள்ளது. இந்த போட்டியில் சுமார் 50% பார்வையாளர்களை பார்வையிட அனுமதிக்கலாம் என பிசிசிஐ ஒப்புதல் அளித்துள்ளதால் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.