பாகிஸ்தானுக்கு எதிராக 57 ரன்கள் எடுத்திருக்கும்போது ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக 11 ஆயிரம் ரன்களை கடந்து சாதனைப் படைத்துள்ளார் விராட் கோலி.
இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி 57 ரன்களை எடுத்தபோது ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் தனது 11 ஆயிரம் ரன்களை பதிவு செய்தார். அவர் 222 இன்னிங்சில் இந்த ரன்னைக் கடந்தார்.
இதன்மூலம் 11 ஆயிரம் ரன்களை விரைவாக கடந்த வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். இதற்கு முன் சச்சின் தெண்டுல்கர் 276 இன்னிங்சில் 11 ஆயிரம் ரன்களை கடந்ததே சாதனையாக இருந்தது. விராட் கோலி தற்போது அதை முறியடித்துள்ளார். ரிக்கி பாண்டிங் 286 இன்னிங்ஸ் உடன் 3-வது இடத்திலும், கங்குலி 288 இன்னிங்ஸ் உடன் 4-வது இடத்திலும், கல்லீஸ் 293 இன்னிங்ஸ் உடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளனர்.
11,000 ரன்களை கடக்கும் 9-வது சர்வதேச வீரர் விராட் கோலி. அதேசமயம், 11,000 ரன்களை கடக்கும் 3-வது இந்தியர் விராட் கோலி ஆவார்.
குறைந்த இன்னிங்ஸில் 11,000 ரன்களை எட்டிய டாப்-5 வீரர்கள்:
- விராட் கோலி – 222 இன்னிங்ஸ்
- சச்சின் டெண்டுல்கர் – 276 இன்னிங்ஸ்
- ரிக்கி பாண்டிங் – 286 இன்னிங்ஸ்
- சௌரவ் கங்குலி – 288 இன்னிங்ஸ்
- ஜாக் காலிஸ் – 293 இன்னிங்ஸ்
சச்சின் தெண்டுல்கர் 10 ஆயிரம் ரன்னில் இருந்து 11 ஆயிரம் ரன்களை கடக்க 17 இன்னிங்ஸ் மட்டுமே எடுத்துக் கொண்டார். அதேபோல்தான் விராட் கோலியும் 17 இன்னிங்சில் 10 ஆயிரம் ரன்னில் இருந்து 11 ஆயிரம் ரன்களை கடக்க எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் உலகக்கோப்பை தொடரின் 22-வது லீக் ஆட்டம் மான்செஸ்டரில் இன்று மதியம் 3 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அகமது பந்து வீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் தவானுக்குப் பதில் விஜய் சங்கர் இடம்பிடித்தார்.
ரோகித் சர்மா (140), லோகேஷ் ராகுல் (57), விராட் கோலி (71 மழையின்போது ஆட்டம் நிறுத்தப்பட்டபோது எடுத்த ரன்) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இந்தியா 46.4 ஓவரில் 305 ரன்கள் எடுத்திருக்கும்போது மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.
சுமார் அரைமணி நேரம் கழித்து மழை நின்றதும் மீண்டும் ஆட்டம் தொடங்கியது. விராட் கோலி 77 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். மழைக்குப்பின் இந்தியா விளையாடி 20 பந்தில் 31 ரன்கள் எடுக்க ஒட்டுமொத்தமாக 50 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 336 ரன்கள் குவித்தது.
விஜய் சங்கர் 15 பந்தில் 15 ரன்கள் எடுத்தும், கேதர் ஜாதவ் 8 பந்தில் 9 ரன்கள் எடுத்தும் களத்தில் இருந்தனர். பாகிஸ்தான் அணி சார்பில் முகமது அமிர் 47 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுக்கள் கைப்பற்றினார். இதனால் பாகிஸ்தானுக்கு 337 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா.