2020 ஐபிஎல் தொடரில் கலக்கிய தமிழகத்தைச் சேர்ந்த தங்கராசு நடராஜன் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சுற்றுப்பயணத்திலும் சிறப்பாக விளையாடினார். கடந்த ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக களமிறங்கிய இவர் 16 போட்டிகளில் பங்கு பெற்றார். இதில் இவர் தனது யார்க்கர் பந்துவீச்சின் மூலம் 16 விக்கெட்களை வீழ்த்தி அனைவரது கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்திருந்தார்.
இதன் மூலம் நடராஜன் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சுற்றுப்பயணத்தில் வலைப்பயிற்சி பந்துவீச்சாளராக தேர்வு செய்யப்பட்டார். ஆனால் வீரர்களுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் என மூன்று வடிவிலும் அறிமுகமாகினார். ஆஸ்திரேலிய தொடரில் சிறப்பாக விளையாடியதால் தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்து டி20 மற்றும் ஒருநாள் தொடரில் நடராஜனுக்கு வாய்ப்பு கிடைத்தது.
இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற கடைசி t20 போட்டியில் நடராஜனுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. இதில் நடராஜன் சிறப்பாக விளையாடி ஒரு விக்கெட் வீழ்த்தி இருக்கிறார். இதையடுத்து இந்தியா – இங்கிலாந்து இடையிலான 3 ஒருநாள் தொடருக்கான இந்திய அணியிலும் நடராஜன் இடம் பெற்றிருக்கிறார். இந்த ஒருநாள் தொடர் வருகின்ற 23ஆம் தேதி தொடங்குகிறது.
இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நடராஜன் குறித்து இந்திய கேப்டன் விராட் கோலி பேசியிருக்கிறார். விராட் கோலி கூறுகையில் “நடராஜன் இந்த இங்கிலாந்து தொடரில் சிறப்பாக விளையாடி தன்னை நிரூபித்தால் கண்டிப்பாக டி20 உலக கோப்பை தொடரில் அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படும்.
இங்கிலாந்து தொடரில் கொடுக்கப்படும் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இனி வரும் போட்டிகள் அனைத்தும் நடராஜனுக்கு பலப்பரீட்சையாக இருக்கும்” என்று கூறியிருக்கிறார். எனவே நடராஜன் இனிவரும் இங்கிலாந்து ஒருநாள் தொடரில் தன்னை நிரூபித்து டி20 உலக கோப்பை தொடரில் இடம் பெற வேண்டும் என்று ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.