களவியூகம், பந்துவீச்சு மாற்றம் பற்றி கோலி நிறைய கற்றுக் கொள்ள வேண்டும்: சுனில் கவாஸ்கர்

இந்திய கேப்டன் விராட் கோலி ஒரு கேப்டனாக நிறையக் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது, உத்தி ரீதியாக, சமயோசித முடிவுகளில் கோலி இன்னும் கொஞ்சம் தேற வேண்டியுள்ளது என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்தார்.

இந்தியா டுடே நியூஸ் சேனலில் கவாஸ்கர் கூறும்போது, “அவர் இன்னும் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும். முன்பு தென் ஆப்பிரிக்கத் தொடரிலும் தற்போது இங்கிலாந்து தொடரிலும் பார்த்தோம்.

கொஞ்சம் சரியான களவியூகம் சரியான பந்து வீச்சு மாற்றம் ஆகியவற்றை அவர் செய்திருந்தால் முடிவு வித்தியாசமாக அமைந்திருக்கும்., அவர் கேப்டனாகி 2 ஆண்டுகள் (உண்மையில் 4 ஆண்டுகள்) ஆகிறது எனவே அனுபவமின்மையும் ஒரு காரணம்.” என்றார்.

முதல் டெஸ்ட் போட்டி முதல் இங்கிலாந்தின் டாப் ஆர்டர்களைக் கழற்றிவிட்டு பின் கள வீரர்களை ஆடவிட்டது அவரது களவியூகம் மற்றும் அனுபவமற்ற பந்து வீச்சு மாற்றத்தினால் இங்கிலாந்து வெற்றி பெற்றதில் முடிந்தது.

சாம் கரன் சிறப்பாக ஆடிய போது அஸ்வினை பந்து வீச்சிலிருந்து தூக்கியது, அன்று ஷமி பிரமாதமாக வீசிய போது அவருகு 3வது ஸ்லிப் வைக்காமல் பட்லர், பிராட், பரவலான களவியூகத்தில் ஏகப்பட்ட சிங்கிள்களை எடுத்து பிறகு பட்லர் வெளுத்துக் கட்டியதும் கோலியின் தவறுகளே, இதைத்தான் அனுபவமின்மை என்றார் சுனில் கவாஸ்கர்.

ஆனால் செய்தியாளர் ஒருவரிடம் விராட் கோலி இது சிறந்த அணியல்ல என்று நீங்கள் நினைத்தால் அது உங்கள் கருத்து என்று கூறியது பற்றி கவாஸ்கர் கூறும்போது,

“தோற்றுப் போய் உட்கார்ந்திருக்கும் ஒருவரிடம் அந்த நேரத்தில் சிறந்த அணியா என்ற கேள்வியைக் கேட்கக் கூடாது ஆனால் செய்தியாளராக அவர் கடமையைச் செய்தது நியாயமே. அதற்கு விராட் கோலி ஒருபோதும், “நீங்கள் சரி, நாங்கள் தவறு” என்று கூறப்போவதில்லை. எனவே இதில் அதிகம் பார்க்க ஒன்றுமில்லை, ஏற்கெனவே தோல்வியில் அவர் துவண்டு போயிருப்பார், அந்தத் தருணத்தில் அவர் அப்படித்தான் பதிலளித்திருப்பார்” என்றார்

அதே போல் ரவிசாஸ்திரி கடந்த 15-20 ஆண்டுகளில் இந்த அணியே சிறந்தது என்று கூறியதையும் சுனில் கவாஸ்கர் சீரியசாக எடுத்துக் கொள்ளாமல், “நேர்மையாக ரவி சாஸ்திரி முந்தைய இந்திய அணிகளை மட்டம்தட்டும் நோக்கில் கூறியிருக்க மாட்டார், இந்த அணியை உத்வேகப்படுத்த அவர் கூறியிருப்பார்.

நிச்சயம் முந்தைய அணிகளை மட்டம்தட்டுவது அவரது நோக்கமாக இருக்காது என்றே நான் நினைக்கிறேன்” என்றார்.

Vignesh G:

This website uses cookies.