ஸ்டீவ் ஸ்மித் இல்லாததால் விராட் கோலியே உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங், ஸ்டீவ் ஸ்மித் தற்போது இல்லாததால் விராட் கோலியே உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் எனக் கூறியுள்ளார். முன்னதாக மெல்போர்னில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில், நிருபர்களின் கேள்விக்கு பாண்டிங் பதிலளித்து வந்தார். அப்போது அவரிடம் ’உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் யார்’ என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த ரிக்கி பாண்டிங் கூறியதாவது, ”ஸ்டீவ் ஸ்மித் தற்போது இல்லாததால் விராட் கோலி தான் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன். தற்போது ஸ்டீவ் ஸ்மித் விளையாடி இருந்தால் அவரே உலகின் நம்பர் 1 பேட்ஸ்மேன் எனக் கூறியிருப்பேன். ஆனால் அவர் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கேப்டவுன் தொடரில் பந்து சேதப்படுத்திய குற்றச்சாட்டில், ஒரு வருடம் கிரிக்கெட் விளையாட ஆஸ்திரேலிய நிர்வாகத்தால் தடை செய்யப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலிய அணி பெற்ற அதிக வெற்றிகளுக்கு ஸ்மித்தே காரணம். குறிப்பாக ஆஷஸ் தொடர். கடந்த நான்கு வருடங்களில் ஆஸ்திரேலிய அணி பெற்ற வெற்றிகளுக்கு ஸ்மித்தின் பங்களிப்பு அளப்பரியது. ஸ்மித்தின் சிறந்த மற்றும் துல்லியமான பேட்டிங்கை, கடந்த வருடம் நடைபெற்ற ஆஷஸ் தொடரை நீங்கள் பார்த்திருந்தால் தெரியும்” எனக் கூறியுள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 6 விக்கெட்டுகளை சாய்த்து அட்டகாசப்படுத்தினார். ரோகித் சர்மா சதம் நொறுக்கினார்.
269 ரன்கள் இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் 40 ரன்களில் (27 பந்து, 8 பவுண்டரி) ஆட்டம் இழந்தார்.
இதைத் தொடர்ந்து ரோகித் சர்மாவும், கேப்டன் விராட் கோலியும் இணைந்து வெற்றிப்பாதைக்கு அடித்தளமிட்டனர். தொடக்கத்தில் நிதானத்தை கடைபிடித்து பிறகு அதிரடியில் வெளுத்துகட்டிய ரோகித் சர்மா, பந்தை சிக்சருக்கு விரட்டி தனது 18-வது சதத்தை பூர்த்தி செய்தார். விராட் கோலி தனது பங்குக்கு 75 ரன்கள் (82 பந்து, 7 பவுண்டரி) எடுத்து அவுட் ஆனார்.
முடிவில் இந்திய அணி 40.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 269 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. ரோகித் சர்மா 137 ரன்களுடனும் (114 பந்து, 15 பவுண்டரி, 4 சிக்சர்), லோகேஷ் ராகுல் 9 ரன்னுடனும் களத்தில் இருந்தார்.
வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 2-வது ஆட்டம் நாளை நடக்கிறது.