இவர் கேப்டன்ஷியில் தான் ஒட்டுமொத்த இந்தியாவின் கனவு நனவானது : முன்னாள் வீரர் புகழாரம்!
இவர் தலைமையிலான இந்திய அணி தான் ஒட்டுமொத்த இந்தியாவின் கனவையும் நனவாக்கியது என இந்திய அணியின் முன்னாள் வீரர் லக்ஷ்மன் புகழாரம் சூட்டியுள்ளார்.
இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் 1947 முதல் பல்வேறு டெஸ்ட் தொடரில் பங்கேற்ற போதும் ஒருமுறை கூட தொடரை கைப்பற்றி கோப்பையை வென்றது இல்லை. 2018–19 கோஹ்லி தலைமையிலான இந்திய அணி, அடிலெய்டு, மெல்போர்ன் டெஸ்டில் வெற்றி பெற்று, ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை முதன் முறையாக 2–1 என கைப்பற்றி வரலாறு படைத்தது.
இது இந்திய கிரிக்கெட் அணிக்கு 2019ஆம் ஆண்டின் மறக்கமுடியாத ஒரு தருணமாக நிச்சயம் இருக்கும். ஆஸ்திரேலிய தொடரில் இந்திய அணியின் இளம் வீரர்கள் விளையாடிய விதமும் இந்தியாவின் எதிர்காலம் எவ்வளவு சிறப்பானதாக இருக்கப்போகிறது என பேச வைத்தது.
இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் விவிஎஸ் லட்சுமண் பேசுகையில்.
“இந்திய கிரிக்கெட் அணிக்கு 2019ம் ஆண்டு சிறப்பானதாக அமைந்தது. டெஸ்ட் வீரர் என்ற அடிப்படையில், ஆஸ்திரேலியாவை அதன் சொந்தமண்ணில் வீழ்த்தி கோப்பை வெல்ல வேண்டும் என்பது எனது கனவு. எனது கனவு மட்டுமல்ல ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களின் கனவு அது.
எனது காலத்தில் இதை நிறைவேற்ற முடியவில்லை என எனக்கு கவலை இருந்தது. தற்போதுள்ள கோஹ்லி தலைமையிலான இந்திய அணியை நினைத்து பெரிதும் மகிழ்ச்சி அடைகிறேன்.
ஆஸ்திரேலியாவை அவர்களது சொந்தமண்ணில் முதன் முறையாக வீழ்த்தி, டெஸ்ட் கோப்பை வென்று இந்தியாவின் கனவை நனவாகியுள்ளனர். இது 2019ல் இந்திய கிரிக்கெட்டின் சிறப்பான தருணம்.” என லட்சுமண் கூறினார்.