உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் தோனி ஆட்டம் நடந்தது எனது கண்ணில் தண்ணீர் வந்துவிட்டது என மனம் திறந்து பேசியுள்ளார் கேப்டன் விராட் கோலி.
இந்த ஆண்டு ஜூலை மாதம் நடந்து முடிந்த ஒரு நாள் போட்டிக்கான உலக கோப்பை தொடரில் மிகச்சிறப்பான அணியாகக் கருதப்பட்ட இந்தியா, துரதிஷ்டவசமாக அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணியிடம் தோல்வி அடைந்து, உலகக்கோப்பையில் இருந்து வெளியேறியது ஏமாற்றம் அளித்தது.
அரையிறுதியில் இறுதிவரை போராடிய தோனி ரன் அவுட் ஆகி வெளியேறியபோது ஒட்டுமொத்த இந்தியாவே கண்ணீரில் மூழ்கியது. உலகக்கோப்பை அரையிறுதிக்கு பிறகு தோனி இந்திய அணியில் இடம்பெறவில்லை.
இந்நிலையில் கேப்டன் பொறுப்பில் நன்கு செயல்பட்டு வரும் விராட் கோலி தனது முதல் உலகக் கோப்பை கேப்டன் பொறுப்பு குறித்தும், டெஸ்ட் போட்டியில் நம்பர் 1 அணியை வழி நடத்துவது குறித்தும், தோல்வி அடைந்தால் அதை எப்படி ஏற்றுக்கொள்வீர்கள் என்பது குறித்தும் மனம் திறந்து பேசினார்.
இது குறித்து கோஹ்லி பேசியதாவது, “தோல்வியால் பாதிக்கப்படுவீர்களா என கேட்கின்றனர். எல்லோரையும் போன்று தான் நானும், தோல்வியடைந்தால் பாதிக்கப்படுவேன். கடந்த உலக கோப்பை தொடர் அரையிறுதியில் நியூசிலாந்திடம் வீழ்ந்தது வேதனையாக இருந்தது.
இந்த போட்டி துவங்கும் முன், கடினமான சூழ்நிலைகளை கடந்து அணியை எப்படியும் வெற்றிக்கு கொண்டு செல்ல வேண்டும் என விரும்பினேன். கடைசியில் இது நடக்காமல் போனது வருத்தமாக இருந்தது. ஏனெனில் தோற்பது எனக்குப் பிடிக்காது.
எல்லாம் முடிந்த பின், இப்படிச் செய்திருக்கலாமோ? அப்படிச் செய்திருக்கலாமோ? என பேச விரும்ப மாட்டேன். ஒவ்வொரு முறை களமிறங்கும் போதும், அதை எனக்கு கிடைத்த பெருமையாக நினைப்பேன். போட்டி முடிந்து வெளியேறும் போது, என்னால் முடிந்தளவுக்கு தேசத்திற்காக அனைத்து சக்தியையும் தந்து விட்டு வர வேண்டும் என எண்ணுவேன்.
நாங்கள் விளையாடிய விதத்தை பார்த்து, அடுத்து வரும் தலைமுறையினர் வியக்க வேண்டும். அவர்களைப் போல நாமும் விளையாட வேண்டும் என எண்ண வேண்டும். அப்படித் தான் நாங்கள் விளையாட விரும்புகிறோம்” என கோஹ்லி கூறினார்.