மைதானத்திலேயே உயிரிழக்கும் கிரிக்கெட் வீரர்கள்; அதிர்ச்சியில் கிரிக்கெட் உலகம்
கோவா மற்றும் மகாராஷ்டிரம் மற்றும் கொல்கத்தாவில் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்ற மூன்று வீரர்கள், போட்டியின்போதே மாரடைப்பால் மரணமடைந்த சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கோவா மாநிலத்தைச் சேர்ந்த ரஞ்சி கோப்பை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ராஜேஷ் கோட்ஜி. 47 வயதான இவர், மடக்கான் கிரிக்கெட் கிளப் சார்பில் நடத்தப்பட்டு வரும் கிரிக்கெட் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை விளையாடிக் கொண்டிருந்தார்.
இதேபோன்று, மகாராஷ்டிரத்தின் நவி மும்பை பகுதிக்குட்பட்ட கன்சோலி கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது வந்தது. இதில், 36 வயதான சந்தீப் சந்திரகாந்த் மாத்ரே எனும் வீரர் ஆர்வமுடன் பங்கேற்று விளையாடி வந்தார்.
போட்டியில் பந்து வீசிக் கொண்டிருந்தபோது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனே அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டாலும், அவரது உயிரை காப்பாற்ற இயலவில்லை.
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு நிகழ்ந்த இந்த இரண்டு வீரர்களின் மரணமே கிரிக்கெட் உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது மேலும் ஒரு வீரர் மைதானத்திலேயே இறந்துள்ளார்.
கொல்கத்தாவை சேர்ந்த அன்கித் சர்மா என்னும் 21 வயது இளம் கிரிக்கெட் வீரர், உள்ளூர் போட்டிகள் பலவற்றில் தொடர்ந்து விளையாடி வந்துள்ளார்.
ஆல் ரவுண்டரான இவர் கொல்கத்தாவில் இன்று நடைபெற்ற உள்ளூர் கிரிக்கெட் தொடர் ஒன்றில் விளையாடி கொண்டிருந்த போது திடீரென மயக்கமடைந்து மைதானத்திலேயே சுருண்டு விழுந்துள்ளார்.
அவருக்கு சக வீரர்கள் முதலுதவி கொடுத்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர், ஆனால் சிகிச்சை பலனின்றி அன்கித் சர்மா உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் கை விரித்துள்ளது.
கார்டியாக் அரெஸ்ட் என்று சொல்லப்படும் நெஞ்சுவலி காரணமாகவே அன்கித் சர்மா உயிரிழந்திருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள மருத்துவ அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஒரே வாரத்தில் மூன்று வீரர்கள் அடுத்தடுத்து மைதானத்திலேயே மரணமடைந்துள்ள சம்பவம் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.